Dr SOUNDARA MAHADEVAN

முனைவர் சௌந்தர மகாதேவன்

Profession தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேராசிரியர், பதிப்பாளர், கல்லூரி

Biography

டாக்டர் சௌந்தர மகாதேவன் தன்குறிப்பு
திருநெல்வேலி, ரஹ்மத் நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர். சௌந்தர மகாதேவன், சிறுவயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பேச்சாளர், இணையத் தமிழ்ஆய்வாளர்.
தந்தையார் ம.சௌந்தரராஜன், தாயார் சௌ.பொன்னழகி ஆகியோரின் மகனாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் 10.4.1974 ஆமாண்டு பிறந்த ச.மகாதேவனுக்கு, ம.வெங்கடலட்சுமி என்கிற துணைவியாரும் ம.சௌந்தர்ராஜ், ம.பிரணவ் என்கிற மகன்களும் உள்ளனர்.
பெற்ற பரிசுகள்
பாரதப்பிரதமர் விருது
20 வயதில் பாரதப் பிரதமரின் “சத்பவனா தேசியக் கட்டுரையாளர் விருதையும்” (12.01.1994, NEWDELHI VIGYAAN BHAVAN) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் “தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழையும் ரூ.10,000/- முதல்பரிசினையும் பெற்றவர்.
தமிழக முதல்வரின் விருது
தமிழகஅரசு தஞ்சையில் 1995 ஆண்டு நடத்திய எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு “புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு” எனும் தலைப்பில் எழுதி மாநில முதலிடம் பெற்றுத் தமிழக முதல்வரின் விருது பெற்றவர்.
தங்கப்பதக்கம்
சென்னை மதுபோதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு நிறுவனம் நடத்திய மதுபோதை ஒழிப்பு தொடர்பான கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று நீதியரசர் நடராஜன் அவர்களிடம் (1992) 8 கிராம் தங்கப்பதக்கம் பெற்றவர்.
தமிழக ஆளுநரிடம் விருது
சென்னை மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய சித்தமருத்துவக் கட்டுரைப்போட்டியில் மாநில முதலிடம் பெற்று அப்போதைய தமிழக ஆளுநர் டாக்டர் சென்னாரெட்டி அவர்களிடம் (1996) சிறந்த கட்டுரையாளர் விருதினைப் பெற்றவர்.
சென்னை கம்பன் கழகவிருதுகள்
சென்னை கம்பன் கழகத்தின் ஏஎம்எம் வெள்ளையன் செட்டியார் அறக்கட்டளை நடத்திய சீறாப் புராணக் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று கம்பன் கழகவிருதினை நீதியரசர் முமு.இஸ்மாயில் அவர்களிடம் (1997) பெற்றவர், சென்னை கம்பன் கழகத்தின் பாரதி லெட்சுமணன் அறக்கட்டளை நடத்திய கவிதைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று கம்பன் கழகவிருதினை திரு. ஜி.கே மூப்பனார் அவர்களிடம் (1997) பெற்றவர்,
திரு. கமல்ஹாசனிடம் சிறந்த கட்டுரையாளர் விருது
கல்லூரிக் காலகட்டத்தில் (1997) “மெல்லத் தமிழ்இனி” எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று திரு. கமல்ஹாசனிடம் சிறந்த கட்டுரையாளர் விருது பெற்றார்; அக்கட்டுரையை அன்றைய குமுதம் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் “குமுதம்”ஸ்பெஷல் இதழில் வெளியிட்டுச் சிறப்பித்தார்.
திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பரிசு
திருமதி லதா ரஜினிகாந்த் எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்” எனும் நூலைச் சிறந்தமுறையில் திறனாய்வு செய்ததற்காக திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பரிசும் பாராட்டும் (1997) பெற்றவர்.
தமிழில் கல்லூரி முதலிடம்
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் எம்.பில்(தமிழ்) ஆய்வியல் நிறைஞர் கல்லூரி முதலிடம் பெற்றவர்.
தமிழ்மாமணி விருது
மதுரை மீனாட்சி மிஷன் தமிழக ஆசிரியர்களிடம் நடத்திய “மனதில் நின்ற மாணவர்கள்” எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் (1999) பெற்றவர். சென்னை அரிமா சங்கத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது (2008), சென்னை அன்பு பாலம் சேவை அமைப்பின் இளம் சமூக சேவகர் விருது (2010) , நெல்லை அரிமா சங்கத்தின் இளம் கல்வியாளர் விருது (2011), உள்ளிட்டப் பல்வேறு விருதுகள் பெற்றவர். சென்னை கவிதை உறவு இலக்கிய அமைப்பின் தமிழ்மாமணி விருது (2016), காஞ்சி சங்கரமடத்தின் சார்பில் மகாசுவாமிகள் ஜெயந்திவிருது (2016), தேனி கலை இலக்கிய மையத்தின் நன்நெறி ஆசிரியர் விருது (2017), உங்கள் நண்பன் இலக்கிய இதழின் கல்விச் சிந்தனையாளர் விருது (2018) ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த ஆய்வாளருக்கான பன்னாட்டு விருது
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், துபாய் தேசிய கல்வி அறக்கட்டளையும், அஸிஸ்ட் உலக சாதனை அமைப்பும் இணைந்து நடத்திய 2021 மணி நேரப் பன்னாட்டு சாதனை நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான பன்னாட்டு விருதினைப் (27.09.2021) பெற்றார்.
செந்தமிழின் சொல்வேந்தர்
தமிழ் கற்பித்தல், தமிழ் ஆய்வுநிகழ்த்துதல், தமிழை உலகாளாவிய அளவில் கொண்டுசெல்லுதல் ஆகிய நன்முயற்சிகளுக்காக திருநெல்வேலி பொதிகை தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழின் சொல்வேந்தர் விருதினை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.அப்பாவு அவர்கள் (11.03.2022) வழங்கிச் சிறப்பித்தார்.
அரிமா சங்கச் சாதனையாளர் விருது
திருநெல்வேலி அரிமா சங்கச் சாதனையாளர் விருது (11.03.2022) தமிழ்ப் பணிகளுக்காகத் தரப்பட்டது
எழுதிய நூல்கள்
இணையத்தமிழ், மகாபாரதி இணையக் கவிதைகள், சமூகசேவகர் பாலம் பா.கலியாணசுந்தரம், தேமதுரத்தமிழ், இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர், வண்ணதாசன், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காலத்தின்குரல், வாழநினைத்தால் வாழலாம், மதிப்பீட்டுக்கல்வி, தண்ணீர் ஊசிகள் (மேலும் வெளியீட்டகம் வெளியிட்ட சௌந்தர மகாதேவன் கவிதைத்தொகுப்பு),மதிப்பீட்டுக் கல்வி,திருநெல்வேலி நினைவுகள், பணிவாய்ப்புத் தமிழ், போட்டித்தேர்வுகளும் தமிழும், ஆகிய 16 நூல்களைப் படைத்துள்ளார். தமிழகஅரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உயர் கல்விப்பாடநூல் மின் நூலாசிரியராகக் காப்பிய வகைமை, பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும், புராணவகைமை, காப்பியவகைமையும், புதியபோக்கும், சிற்றிலக்கிய வகைமை, சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சி ஆகிய ஆறுமின்நூல்கள் எழுதியுள்ளார்.
பதிப்பித்த நூல்கள்
கல்லூரித் தமிழ்த்துறையின் பாடத்திட்டக் குழுத்தலைவராக தீந்தமிழ், பொருநைத்தமிழ், இளந்தமிழ், பைந்தமிழ், பழகுதமிழ், அமுதத்தமிழ், சிறுகதைக்களஞ்சியம், இன்பத்தமிழ், இக்காலத்தமிழ், சமயத்தமிழ், பயன்பாட்டுத் தமிழ்,சங்கத்தமிழ், மரபுத்தமிழ், தொல்தமிழ், தன்னம்பிக்கைத்தமிழ், எனும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆறாம்விரல், மனத்துளி, கானல்மீன்கள், கவிப்புறா, இமைச்சிறை, காலநதி, பகல்நிலவு எனும் மாணவர் கவிதை நூல்களைப் பதிப்பித்துள்ளார். தேசிய,பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 80 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். சதக்கத் ஆய்விதழின் ( SADAKATH – A RESEARCH BULLETIN) ISSN 2347-7644 ( UGC APPROVED JOURNAL NO.64130, INDEXED IN GOOGLE SCHOLAR) பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
ஆய்வு
’வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள்’ எனும் தலைப்பில் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் குறுஆய்வுத்திட்டத்தில் 2009- 2011 (UGC- MINOR RESEARCH PROJECT) “’வண்ணதாசன் படைப்பிலக்கியங்களில் இயற்கை” எனும் ஆய்வை நிறைவுசெய்து அவ்வாய்வேட்டினை மத்திய அரசின் தகவல் களஞ்சியமான INFLIBNET தளத்தில் பதிவிட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வுத்துறையின் சார்பில் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி, மதிதா இந்துக்கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, குற்றாலம் பராசக்தி கல்லூரி, தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் தமிழாய்வு மையங்களின் முனைவர் பட்ட வழிகாட்டுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்துவருகிறார்.
பொதிகைத் தொலைக்காட்சியில் ‘’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” எனும் நிகழ்ச்சியில் கவிதைகள் வழங்கியுள்ளார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சிகளில் விவாதஅரங்குகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார். திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் குரல்தேர்வுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுவருகிறார்.
எழுதிய இதழ்கள்
புதுப்புனல், கணையாழி, வடக்குவாசல், அமிர்தா, புன்னகை, ரசனை போன்ற சிற்றிதழ்களில் புதுக்கவிதைகள் எழுதிவருகிறார். இந்து(தமிழ்), தினமலர் ஆகிய வெகுசனஇதழ்களில் கவிதை, தொல்லியல், வரலாறு, கலைஇலக்கியம், சுற்றுச்சூழல்,தன்னம்பிக்கை, ஊடகம், சமயநல்லிணக்கம், தமிழ்மொழி வளர்ச்சி, இளைஞர் நலன், ஆளுமைவளர்ச்சி போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆனந்தவிகடன் சொல்வனம் பகுதியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன.
செம்மொழித் தமிழாய்வுமத்திய நிறுவனம், தமிழ்வளர்ச்சித்துறை, ,தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையம், ’மேலும்’ இலக்கிய அமைப்பு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் ஆகிய அமைப்புகள் நடத்தும் கருத்தரங்கங்களில் நெறியாளராய் பங்கேற்று உரைநிகழ்த்தியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட இணைய வலைப்பூக்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார். மகாதமிழ் எனும் வலையொளித்தடத்தை நடத்தி மகாதமிழ் யூடியுப் மூலம் தன்னம்பிக்கை, இலக்கியத் திறனாய்வு,நூல்விமர்சனம் ஆகியவற்றை வழங்கிவருகிறார். முகநூல், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் சிறுஉரைகளைப் பதிவேற்றிவருகிறார்.
சாகித்ய அகாதெமியுடன் இணைந்து உரையரங்கம்
சாகித்ய அகாதெமியுடன் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து 28.08.2018 அன்று நடத்திய சமயமும் இலக்கியமும் எனும் உரையரங்கின் துணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு சமணசமய இலக்கியங்கள் தமிழுக்கு அளித்தகொடைகள் எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
பொறுப்புகள்
கல்லூரி இளைஞர்நலத் துறையின் ஒருங்கிணைப்பாளராக பதினாறு ஆண்டுகள் திறம்படப்பணியாற்றி எழுத்தாற்றல், பேச்சாற்றல், குறுப்படம் இயக்கும் ஆற்றல் மிக்க நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கலைப்புல முதன்மையராக (DEAN OF ARTS) 2018 – 2021 வரை மூன்றாண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தமிழ்விக்கிபீடியாவில்
தமிழ்விக்கிபீடியாவில் தமிழக எழுத்தாளர் என்ற பிரிவில் இவரின் வாழ்வியல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவமனிதர்கள் காத்திருப்பார்கள்” என்று உறுதியாக நம்புகிறார் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்.
முகவரி: முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627011, , செல்பேசி: 9952140275