Arun Mo

அருண் மோ

Profession எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர்

Biography

அருண் மோ (Arun Mo) எழுத்தாளர், திரைப்படத் திறனாய்வாளர் மற்றும் மாற்று சினிமாவுக்கான களப்பணியாளர் ஆவார். பத்திரிகை மற்றும் மின் ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கருப்பு எனும் மின் ஊடகம் மூலம் பல்வேறு சீரிய மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தியவர். அச்சில் வெளியாகும் மாத இதழான படச்சுருள் இந்தியாவிலேயே குறிப்பிட்ட கருப்பொருளில் வெளியாகும் சினிமா சார்ந்த ஒரே மாத இதழாக வெளியாகி வருகிறது. இந்த இதழ் தமிழ் சினிமா வரலாற்றில் சமூக சினிமா எனும் புதிய பாதத்தை உருவாக்கி, சினிமாவில் பல்வேறு அரசியல் மாற்றங்களை உருவாக்கிய மிக முக்கிய இதழ்.

இவர் மாற்றுத் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இயங்கி வரும் ‘தமிழ் ஸ்டுடியோ’ (Thamizhstudio) அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்தியாவிலேயே சினிமாவிற்கென பிரத்யேகமாக இயங்கும் புத்தக அங்காடி ஒன்றை பத்து ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு அடுத்து மிக அதிகமான சினிமா தொழில்நுட்ப நூல்களை கொண்ட மொழியாக தமிழ் உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம், அருண் மோ அவர்களின் பேசாமொழி பதிப்பகம். இப்பதிகம் சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நூற்றுக்கணக்கான நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய மற்றும் தரமான படைப்பாளிகளை உருவாக்குவதற்காகப் பல்வேறு திரைப்படப் பயிற்சி வகுப்புகளையும், திரைக்கதை பயிலரங்குகளையும் இவர் தொடர்ந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.இந்த பயிற்சி வகுப்புகள், கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பெரிதும் வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று. மிக குறைந்த கட்டணத்தில், அல்லது கட்டணமே இல்லாமல் நடக்கும் இத்தகையிற் பயிற்சிகளில் பங்கேற்று இன்று பலர் இயக்குனர்களாக தொழில்நுட்ப கலைஞர்களாக இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இவரது முக்கியப் படைப்புகள் & புத்தகங்கள்

அருண் மோ அவர்கள் உலக சினிமா, தமிழ் சினிமா மற்றும் சிறுகதைத் தளங்களில் பல முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்:

சினிமா எனும் கலை: தமிழ் சினிமாவில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் சினிமா மொழி குறித்து விவரிக்கும் நூல்.

நாடு கடந்த கலை: உலக சினிமாவின் முக்கியத் திரைப்படங்கள், அவற்றின் தொழில்நுட்பம் மற்றும் காட்சி மொழியைப் பற்றிப் பேசும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

அநீதிக் கதைகள் (பாகம் 1 & 2): சமூகக் கோணங்களை வெளிப்படுத்தும் இவருடைய சிறுகதைத் தொகுப்புகள்.

பீம்ஜி சிங்கம் & கீழடியில் இளவெயினி பாட்டி: குழந்தைகளுக்கான இவருடைய சிறப்பான படைப்புகள்.

இதோடு மட்டுமல்லாமல், ‘இந்து தமிழ் திசை’ போன்ற முதன்மைத் தமிழ் நாளிதழ்களிலும் சினிமா சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

விருதுகள்: தமிழ்நாடு அரசின் சிறந்த பதிப்பாளருக்கான விருதை பெற்றுள்ள இவர், இந்தியாவில் புகழ்பெற்ற வார இதழான ஆனந்த விகடனின் நம்பிக்கை இளைஞர் எனும் விருதையும், அதே நிறுவனத்தால் சிற்றிதழ்களுக்கு வழங்கப்படும் விருதான சிறந்த தமிழ் சிற்றிதழ் விருதை இவரது படச்சுருள் இதழுக்காகவும் பெற்றுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருதையும் பெற்றவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இலக்கிய பிரிவில் இவருடைய அநீதி கதைகள் சிறுகதை தொகுப்பு சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான விருதை பெற்றுள்ளது. மூன் இன் ரெட் அமைப்பினரின் நல்ல சினிமாவிற்கான தன்னிகரில்லா பங்களிப்பு என்கிற விருதையும் பெற்றுள்ளார்.