ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

Profession கவிஞர்

Biography

தக்கலையில் கே.பி.எம்.ஹனீ பானு – எம்.ஜமீலாபீவி தம்பதியருக்கு 07.07.1959 அன்று
பிறந்தார். பொருளாதாரப் பட்டதாரியான இவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் முனைவர்
பட்டம் பெற்று, வட்டார புள்ளியியல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது துணைவி
தி.பரிதாபேகம். இவர்களுக்கு நசரின், ரூகிபர்வின் என்ற இரு குழந்தைகள்.

‘ஜனகணமன’, ‘என் சிறகுகள் வான்வெளியில்’, ‘பூட்டிய அறை’, ‘மைலாஞ்சி’, ‘உம்மா கரு
வண்டாய் பறந்து போகிறாள்’ ஆகிய நான்கு கவிதை நூற்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள்
பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இவரது ‘மைலாஞ்சி’ கவிதை நூலில்
இடம்பெற்றிருந்த கவிதைகள் தமிழ் இஸ்லாமிய கலாச்சாரச் சூழலில் பெரும் அதிர்வுகளை
ஏற்படுத்தியவை. மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மைலாஞ்சி விவாதங்களை உள்ளடக்கிய ‘சின்ன சின்ன புறாக்களும் சில துப்பாக்கிகளும்’ என்றொரு
குறுநூலையும் வெளியிட்டுள்ளார்.

‘புதுக்கவிதையில் நவீனப் போக்குகள்’, ‘இஸ்லாமியப் பெண்ணியம்’, ‘அரபு மார்க்சியம்’,
‘கெண்டை மீன் குஞ்சும் குரானிய தேவதையும்’, ‘பின் நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள்’
ஆகியவை இவரது திறனாய்வு நூல்கள். ‘அரபு மார்க்சியம்’ நூலுக்கு தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. செம்மொழி மாநாட்டில் கவிதைக்காக
சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார்.

இன்குலாப் தொடங்கி எம்.எம்.ஹனிபா வரை தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளின் படைப்புகளை
தனித்தனியாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஓர் ஆய்வுக் கட்டுரைக் காக
இவரும் இவரது குடும்பத்தினரும் மத விலக்கம், ஊர் விலக்கம் செய்யப்பட்டனர்.

ரசூல், களப்பணியாளராகவும் இயங்கினார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் கல்வி, வேலை
வாய்ப்பிற்கான இடஒதுக்கீட்டு குரலுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு இந்திய அளவில்
ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சமூகநீதி கிடைக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார்.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் நலனோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு
ஆடு கோழி பலி தடை சட்டத்திற்கு எதிராக இயங்கியவர். மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து
களம் கண்டவர். உலகமயம், தனியார்மயம், தாராளமயத்திற்கு எதிராகவும், தொழிலாளர்,
விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து
கொண்டு பல இழப்புகளைச் சந்தித்தவர். 2003 ஜூலையில் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்
போராட்டத்தில் பங்கேற்று, ஆறு மாத காலம் அரசு வேலையை இழந்தவர். இப்படியாக, எழுத்தும்
களமும் இவரது வாழ்வின் இடை யறாத இயக்கமாகி உள்ளன.

இவர் தனது 59ஆவது வயதில் 5.8.2017-இல் தக்கலையில் காலமானார்.