| Profession | எழுத்தாளர் |
|---|
சென்னை, திருவல்லிக்கேணியில் நீல.வெங்கடாச்சாரியார்- நீல.பட்டம்மாள் தம்பதியருக்கு
01.12.1901 அன்று பிறந்தார். தந்தை காவல்துறை அதிகாரி.
கோதைநாயகிக்கு ஐந்தரை வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் ஒன்பது வயது
வை.மு.பார்த்தசாரதி ஐயங்கார். பன்னிரண்டு வயதிற்குள் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கோதைநாயகிக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் உள்ளத்தில் பொங்கும்
உணர்வுகளை வாய்மொழி கதையாகச் சொல்லிக் கொண்டிருந்திருந்தார். அவர் வசிக்கும் அதே வீட்டில்
வசித்த டி.சி.பார்த்தசாரதி ஐயங்காரின் மனைவி டி.சி.பட்டம்மாள் அவர் சொல்லும் கதையை
எழுதிக் கொடுத்தார்.
பிறகு தொடக்க காலத்தில் அவர் எழுதிய கதைகளை கணவர் திருத்தம் செய்தும், மாமனார்
செப்பமிட்டும் பயிற்சியளித்து வந்தார். இச்சூழலில் நாடகம் பார்க்க சென்ற இடத்தில்
கோதைநாயகிக்கும் ‘நோபிள் பிரஸ்’ உரிமையாளர் கதிர்வேலு முதலியாரின் மனைவிக்கும் நட்பு
ஏற்பட்டது.
1924-இல் இவர் எழுதிய ‘இந்திரி மோஹனா’ எனும் கற்பனை நாடகத்தை புத்தகமாக
வெளியிட்டார். 1925-இல் ‘வைதேகி’ எனும் புதினத்தையும் வெளிட்டார். வடுவூர் துரைசாமி
ஐயங்காரின் ஆலோசனையின்படி ‘ஜகன் மோகினி’ என்ற பிரசுரத்தின் உரிமையை நாகசாமி
ஐயரிடமிருந்து கோதைநாயகி பெற்றுக் கொண்டார். ‘ஜகன்மோகினி’ எனும் மாத இதழை
நடத்தினார். அதில் ‘வைதேகி’ தொடர் வெளிவந்தது.
1926 தொடங்கி 140க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்தார். 18 குறும் புதினங்கள், 6
சிறுகதைத் தொகுதிகள் 2 நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வெளியிட் டுள்ளார். 1957-இல் ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ பத்திரிகை, “புதினங்கள் எழுதிப் பெரும் பொருள் ஈட்டியவர்” என்று இவர்
பற்றிய கட்டுரையை வெளியிட்டது.
1937-இல் முதலமைச்சர் இராஜாஜி, கோதை நாயகி அம்மையாரை ‘பிலிம் சென்ஸார் போர்டு’
அங்கத்தினராய் நியமித்தார். 1938-இல் இவரது ‘அனாதைப் பெண்’, ‘ராஜமோஹன்’, ‘தயாநிதி’
ஆகிய புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டன. சட்ட மறுப்பு இயக்கம், அந்நிய துணி எதிர்ப்பு
இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்கிறார். பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில்
பேசியிருக்கிறார்.
1948-இல் காந்திஜியின் மறைவிற்குப் பின் ‘மகாத்மாஜி சேவா சங்க’த்தைத் தோற்றுவித்தார்.
மகளிருக்காக மகளிரைக் கொண்டே ‘நந்தவனம்’ என்றொரு இதழை ஆரம்பித்தார்.
1960-இல் உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலும் ‘குளிர்ந்த நெஞ்சம்’ நாவலை எழுதிக்
கொண்டிருந்தார். அந்நாவலை முடிக்குமுன்பே 20.2.1960-இல் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அந்நாவலை அவரது பேர்த்தி வை.மு.விஜயலட்சுமி நிறைவு செய்தார்.