வெ.சாமிநாதசர்மா

வெ.சாமிநாதசர்மா

Profession அறிஞர்

Biography

இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில், முத்துசுவாமி ஐயர் பார்வதி
தம்பதியருக்கு 17.09.1895 அன்று பிறந்தார்.

செங்கல்பட்டு நேடிவ் உயர் நிலைப்பள்ளியில் படித்ததோடு இவருடைய படிப்பு முடிவுக்கு
வந்தது. தந்தை மூலமாக ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி ஆகிய
மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றார்.

1914-இல் (14வது வயதில்) ‘சென்னை செந்தமிழ்ச்சங்கம்’ நிறுவினார். வட்டிக்கடை,
சுருக்கெழுத்துப் பள்ளி, ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம்
ஆகியவற்றில் பணியாற்றினார்.

17-வது வயதில் ‘இந்துநேசன்’ இதழில் இவரது முதல் கட்டுரை வெளியானது. ‘பிழைக்கும்
வழி’ இதழில் ‘மைசூர் தோன்றிய வரலாறு’ எழுதி, அதற்கு 5 ரூபாய் சன்மானம் பெற்றார். இது
அவரின் எழுத்து முயற்சிக்கு ஊக்கம் அளித்தது. ‘ஹேமாங்கி’ எனும் ஆங்கில நாடக நூலை
எழுதினார். அந்நூலின் தட்டச்சுப் படியை பதிப்பாளர் தொலைத்து விட்டார். 1914-இல்
திருவிளையாடல் புராணத்தை மையமாகக் கொண்டு ‘கௌரீ மணி’ என்ற நூலை எழுதி, சொந்த
செலவில் வெளியிட்டார். இதே ஆண்டு, 19 வயதான சர்மா 14 வயது மங்களம் என்பவரை மணந்தார்.
இவருக்கு பல மொழிகள் தெரியும். இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லை. 1915இல்
‘லட்சுமிநாதன்’ எனும் சிறு நாடக நூலை வெளியிட்டார். ‘தேசபக்தன்’ (1917), ‘நவசக்தி’
(1920), ‘சுவராஜ்யா’ (1924 – 26) ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
1926-27இல் மைசூரில் சிறிது காலம் பணியாற்றிய பின், 1930-31இல் அடையாறு பிரம்ம ஞான
சபை நூல் வெளியீட்டுத் துறையில் பணி யாற்றினார்.

1932-இல் மியான்மர் (பர்மா) தலைநகரான இரங்கூன் சென்று 10 ஆண்டுகள் வசித்தார். அங்கே
‘பாரத பந்தர்’ எனும் பெயரில் ஒரு கடையை ஆரம்பித்து சுதேசிப் பொருட்கள், கதர், தரமான
தமிழ் நூல்கள் ஆகியவற்றை விற்பனை செய்தார். அப்போது ‘தனவணிகன்’ எனும் இதழில்
பணியாற்றினார். அப்போது சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே சொக்கலிங்கம்
செட்டியார் 1936-இல் ‘பிரபஞ்ச ஜோதி’ என்னும் நூல் வெளியீட்ட கத்தை நிறுவினார்.

அதன்பின் தொடர்ச்சியாக எழுதினார். அரசியல் – 17, உலக நாடுகளின் வரலாறுகள் – 5,
வாழ்க்கை வரலாறுகள் – 22, உலக அரசியல் தத்துவங்கள் – 3 ஆகிய வரலாற்று நூல்கள்
மட்டுமல்லாது, குறுநாவல் – 1, சிறுகதைத் தொகுதி – 1, நாடகங்கள் – 4, பயணம் – 6,
கட்டுரைத் தொகுதி – 7 ஆகிய படைப்பிலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். ஒன்பது ஆங்கில
நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

13.02.1956இல் துணைவியார் மங்களம் மறைந்தார். மனைவியின் இழப்பினாலும், தனிமை
வாழ்க்கையினாலும் பெருந்துயரடைந்தார். திருவான்மியூர் கலாக்ஷேத்திராவில் தங்கியிருந்த
இவர் 07.01.1978இல் இயற்கை எய்தினார்.