வெள்ளியங்காட்டான்

வெள்ளியங்காட்டான்

Profession அறிஞர்

Biography

கோவை மாவட்டம், காரமடை அருகிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் 21.8.1904 அன்று
என்.கே.ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட வெள்ளியங்காட்டான் பிறந்தார். இவரது தந்தை நிலமற்ற
கூலி விவசாயி.

திண்ணைப் பள்ளியில் மூன்று ஆண்டு காலம் மட்டுமே பயின்றார். கோவையில் தையல்கலை பயின்றார்.
1924-இல் கண்டியூர், சிலீயூர் போன்ற கிராமங்களில் தங்கியிருந்து தையல் தொழில் செய்தார்.
பகல் முழுவதும் தையல் வேலை செய்துவிட்டு, மாலை நேரங்களில் சில மாணவர்களுக்கு பாடம்
நடத்தினார்.

1930-இல் குட்டியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். வசந்தாமணி, நளினி என இரு மகள்கள்,
மனோகரன் எனும் ஒரு மகன்.

இரவு நேரங்களில் விழித்திருந்து புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள இவர், 1942-இல் கவிதைகள்
எழுதத் தொடங்கினார். 1948 வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘இனிய கவி வண்டு’ எனும்
நூலாகத் தாமே வெளியிட்டார். 1949-இல் அவரது மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு 1950-இல்
மரணம் அடைந்தார்.

அந்த ஆண்டு ‘எச்சரிக்கை’ எனும் கவிதை நூலை எழுதி, கடன் வாங்கி 500 படிகள் அச்சடித்து
வெளியிட்டார். ஒரு நூல்கூட விற்கவில்லை. பழைய பேப்பர் கடைக்காரனுக்கு எடைக்குப்
போட்டுவிட்டார்.

1951-இல் கோவில்பாளையத்திலுள்ள சுதந்திர வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் வார்டன் வேலை
கிடைத்தது. அங்கிருந்தும் விலகி, நூற்புத் தொழிலைச் செய்தார்.

பின்னர் தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த ‘நவ இந்தியா’ நாளிதழில் அவருக்கு ‘பிழைத்
திருத்துநர்’ வேலை தரப்பட்டது. 1959-இல் பத்திரிகையாளர் சட்டம் அமுலுக்கு வந்தது.
‘பிழைதிருத்துநர் வேலைக்கு சட்டப்படி ரூ.150 சம்பளம் தரவேண்டும். ஆனால், படிப்பறிவு
இல்லாதவர் என்பதால் சம்பள உயர்வு மறுக்கப்பட்டது.

தாகூரைப் போல தாடியுடன் காட்சியளித்த அவர் உடலை புற்றுநோய் தாக்கியது. அதனால்
21.12.1991 அன்று இறந்தார்.

வெள்ளியங்காட்டான் எழுத்துகள் கவிதைத் தொகுதி, காவியம், சிறுகதைத் தொகுதி என 20
நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து படைப்புகளையும் தொகுத்து 1716 பக்கங்களில் இரண்டு
தொகுதிகளாக ‘காவ்யா’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

2010-இல் கோவையில் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ வெள்ளியங்கோட்டான் நூல்களை
நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றொரு வேண்டுகோளை வைத்தது. அவ்வாண்டே அவரது நூல்களை தமிழக
அரசு நாட்டுடைமை ஆக்கியது.

இவரை ‘சித்தர்களைப் போல வாழ்ந்தவர் வெள்ளியங்காட்டான்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தோழர் நல்லகண்ணு கூறி யிருப்பது நிதர்சனம்.