வா.மு.சேதுராமன்

வா.மு.சேதுராமன்

Profession அறிஞர்

Biography

இராமநாதபுரம் முதுகுளத்தூர் ஆண்டநாயகபுரத்தில் இராமாயி — முத்து இணையர்க்கு
03.02.1935 அன்று பிறந்தார்.

உயர்நிலைப் பள்ளிப்படிப்புக்குப் பின், 1955-இல் காமராசர் ஆட்சிக் காலத்தில்
கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்ட ஓராசிரியர் பணியில் இடிவிலகி கிராமத்தில் ஆசிரியர்
பணியைத் தொடங்கினார். 1958-60 இல் இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்து ஆசிரியப்
பணியில் தொடர்ந்தார்.

27.08.1958- இல் ஆசிரியை சேதுமதியை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். திருவள்ளுவர்,
கவியரசன், முத்துராமலிங்க ஆண்டவர், தமிழ்மணி கண்டன் என நான்கு மகன்கள், பூங்கொடி என்றொரு
மகள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை தமிழ் (1976), முதுகலை (1979), அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆசிரியர் பயிற்சி (1982) ஆகிய பட்டங்களைப் பெற்று, சென்னைப்
பல்கலைக் கழகத்தில் முனைவர் ந.சஞ்சீவி நெறிகாட்டலில் 1988-இல் ‘தமிழ் நூல்களில் கவிதை
பற்றிய கருத்துகளும் கற்பனைகளும்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இடிவிலகியைத் தொடர்ந்து கிழக்கு அபிராமம், கீழப்பார்த்திபனூர் ஆகிய ஊர்களில்
ஓராசிரியராகப் பணியாற்றினார். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராசசூரியமடை, கீழக்குளம்
ஆகிய ஊர்களில் 1960-63 இல் இடைநிலை ஆசிரியராகவும், 1963-66 இல் ஏர்வாடியில்
தமிழாசிரியராகவும், இராமநாதபுரம் செய்யதம்மாள் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத்
தமிழாசிரியராகவும், சென்னையில் 1966-93 இல் முசுலிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமைத்
தமிழாசிரிய ராகவும் பணியாற்றினார். முனைவர் பட்டம் பெற்றவுடன் தமிழாசிரியர்
பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முற்றிலும் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கினார்.

‘தமிழ்ப்பணி’ இதழை கடந்த 46 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். எண்ணிலடங்கா எழுத்தாளர்களை
உருவாக்கியுள்ளார்.

இவரது முதற்கவிதை ‘பொங்கல் வந்தனனே’ தினமணியில் 1962-இல் வெளியானது. 2005 வரை
கவிதைத் தொகுதிகள்- 87, சிறுகாப்பி யங்கள்-7, பெருங்காப்பியங்கள்-6, பக்தி இலக்கி
யங்கள்- 10, ஆய்வுக் கட்டுரைகள்- 4, பயண இலக்கியங்கள்-9, மொழிபெயர்ப்புகள்-3 ஆகிய நூல்கள்
வெளிவந்துள்ளன. இவரது சில நூல்கள் தமிழக அரசின் விருது உட்பட பல விருதுளைப்
பெற்றுள்ளன.

1965-இல் ‘கவியரசன் பதிப்பகம்’ நிறுவி தமது படைப்புகளையும், 1977-இல் ‘தமிழ்மணி
பதிப்பகம்’ நிறுவி இலங்கை, மலேசியா மற்றும் உலகளாவிய தலைவர்களின் உயரிய நூல்களைப்
பதிப்பித்தும், வெளியிட்டும் வருகிறார்.

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தினரின் ‘பெருங் கவிக்கோ’ (1964), தமிழக அரசின்
‘கலைமாமணி’ (1990), கலைஞரின் ‘இயற்செல்வம்’ உட்பட ஏராளமான விருதுகளையும்
பரிசுகளையும் பெற்றார்.