வண்ணதாசன்

வண்ணதாசன்

Profession எழுத்தாளர்

Biography

திருநெல்வேலியில், மார்க்சிய அறிஞர் தி.க.சிவசங்கரன்- தெய்வானை தம்பதியருக்கு
22.8.1946 அன்று பிறந்தார். இயற்பெயர் கல்யாணசுந்தரம். பின்னாளில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்
மீது கொண்ட ஈடுபாட்டினால் ‘வல்லிக்கண்ண தாசனான இவர், அப்பெயரைச் சுருக்கி ‘வண்ணதாசன்’ என
வைத்துக் கொண்டார்.

இந்து நடுநிலைப் பள்ளியிலும், சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்து,
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். 1967-இல்
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பட்டம் பெற்றார்.

1970-இல் ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ திருநெல்வேலி கிளையில் வேலைக்குச்
சேர்ந்தார்.1972-இல் திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சார்ந்த வள்ளியை மணந்தார்.
இவர்களுக்கு சங்கரி என்றொரு மகள், நடராஜ் என்றொரு மகன்.

1962-இல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இவர் எழுதிய ‘ஏழையின் கண்ணீர்’ சிறுகதை
‘புதுமை’ இதழில் வெளியானது. 1976-இல் இவரது முதல் சிறுகதைத் தொகுதி ‘கலைக்க
முடியாத ஒப்பனைகள்’ வெளியானது. அந்நூலை சிறப்பாக வடிவமைத்ததற்காக ‘அஃக்’
பரந்தாமனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்தது. ‘சமவெளி’ (1978), ‘பெயர் தெரியாமல்
ஒரு பறவை’ (1984), ‘மனுசா மனுசா’ (1991), ‘கனிவு’ (1992), ‘நடுகை’, ‘உயரப்
பறத்தல்’ (1998), , 2000இல் 129 கதைகள் ‘வண்ண தாசன் கதைகள்’ எனும் ஒரே தொகுப்பாக
வெளி வந்தது. ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ (2000) ‘பெய்தலும் ஓய்தலும்’ (2007), ‘ஒளியிலே
தெரிவது’ (2010), ‘முத்துக்கள் பத்து’ (2007) என 13 சிறுகதைத் தொகுதிகள்
வெளியாகியுள்ளன.

கல்யாண்ஜி எனும் பெயரில் இவர் எழுதிய கவிதைகள் ‘புலரி’, ‘முன்பின்’ எனும் இரு
தொகுதிகளுக்குப் பின் 200 கவிதைகள் 2000-இல் ‘கல்யாண்ஜி கவிதைகள்’ எனும் தொகுப்பாக
வெளிவந்தது. அதே ஆண்டில் ‘நிலா பார்த்தல்’ கவிதைத் தொகுதியும் வெளிவந்தது.

2009-இல் பவுத்த அய்யனார் உதவியுடன் ‘கல்யாண்ஜி: தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்’
எனும்தொகுப்பு நூல் வடிவமாகவும், கல்யாண்ஜி யின் குரலில் ஒலிப்பேழையாகவும் வெளியாயின.
2001-இல்’வண்ணதாசன் கடிதங்கள்’ தொகுதியும், ஆனந்த விகடனில் வெளிவந்த வண்ணதாசனின்
கட்டுரைகள் 2008-இல் ‘அகம் புறம்’எனும் தொகுதியாகவும் வெளியாகின.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் வண்ணதாசனின் படைப்புகள் குடும்பத்தின்
முக்கியத்துவம், அன்பு, பரிவு, பாசம் கொண்ட வைகளாக உள்ளன.

2010-இல் ‘வண்ணதாசன் படைப்புலகம்’ என்னும் மாநிலக் கருத்தரங்கை திருநெல்வேலி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறையும் ‘மேலும்’ வெளியீட்டகமும் இணைந்து
நடத்தின.