ரெ.கார்த்திகேசு

ரெ.கார்த்திகேசு

Profession எழுத்தாளர்

Biography

மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பீடோங் எனும் சிற்றூரில் ரெங்கசாமி – சிந்தாமணி
தம்பதியருக்கு 24.8.1940 அன்று பிறந்தார்.

தனது ஏழாவது வயதில் (1947) ஹாவர்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பு
வரை படித்தார். அதன் பின்னர் சில பள்ளிகளில் ஐந்தாம் படிவம் வரை படித்தார்.

தான் படித்த பள்ளியிலேயே அவருக்குத் தற்காலிக ஆசிரியர் பணி கிடைத்தது. ஓராண்டு காலம்
பணியாற்றிய பின்னர் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி னார்.

1961 தொடங்கி 1976 வரை ஏறத்தாழ 15 ஆண்டுகள் மலேசிய வானொலி ஒலிபரப்புத் துறையில்
முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் பணியாற்றினார். அதன்பின் கல்வியாளராகத் தன்
வாழ்க்கையை மடைமாற்றிக் கொண்டார்.

ரெ.கா. சிறு வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டார். ‘தமிழ் முரசு’ நாளிதழ் மூலமாக
மாணவர் மணி மன்ற மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசினைப்
பெற்றது. இவருக்கு ‘சிறுகதை மன்னர்’ என்னும் பட்டத்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி
சூட்டினார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை 5 தொகுதி களாக
வெளிவந்துள்ளன. ஐந்து நாவல்கள், ஒரு குறுநாவல், இரண்டு திறனாய்வுக் கட்டுரைத்
தொகுதிகள், இரண்டு தமிழாக்க நூல்கள், ஒரு வரலாற்றாய்வு நூல் ஆகியவை வெளியாகி உள்ளன.

ரெ.கா.வின் படைப்புகள் அனைத்தும் மலேசியச் சூழலை முதன்மைப் படுத்துவதாகவே உள்ளன.
தோட்டம் வாழ் மக்களின் வாழ்க் கையை தொடக்க காலத்திலும், சிற்றூர் வாழ் மக்களின் வாழ்க்கையை
பின்னாட்களிலும் எழுதியுள்ளர்.

இவரது படைப்புகளை மலாய் பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் பலர்
ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வேடுகளும் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இவரது சிறுகதைகள் கணையாழி, கல்கி, கலைமகள், இந்தியா டுடே, தீபம்,
தீராநதி, காலச்சுவடு, யுகமாயினி, வார்த்தை ஆகிய இதழ்களின் வழியாக பரவலாக வெளி
வந்துள்ளன. திசைகள், திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களிலும் எழுதியுள்ளார்.

‘காதலினால் அல்ல’ நாவல் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மதிப்புமிகு உயரிய விருதாகக் கருதப்படும்
‘தான்ஸ்ரீ மாணிக்கவாசகம்’ விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். மேலும், கல்கி வைரவிழா,
இலக்கியச் சிந்தனை, கணையாழி, திண்ணை, கரிகாலன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்,
சிங்கப்பூர் தகவல் மற்றும் கலை அமைச்சு, சந்தனம்மாள் அறக்கட்டளை, லில்லி தேவசிகாமணி ஆகிய
அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.