| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலிச் சீமையில் கார்காத்த வேளாளர் மரபில் தோன்றிய பிறவிப்பெருமாள் பிள்ளைக்கும்
சொர்ணத்தம் மாளுக்கும் 02.03.1886 அன்று பிறந்தார். இவருக்கு முன் பிறந்த ஒன்பது ஆண்
குழந்தைகளும் ஒவ்வொன்றாக இறக்க, பத்தாவதாகப் பிறந்த பெண் குழந்தை மட்டும் எஞ்சியது. ஆண்
குழந்தை வேண்டி ஐந்தாண்டு சேதுக் கடலாடி இராமேஸ்வரப் பெருமானை வழிபட்டு பிறந்ததால்
இவருக்கு ‘சேது’ எனப் பெயரிட்டனர். சேதுவுக்கு ஐந்து வயது நிரம்பிய போது அவரது
சகோதரியும் இறந்தார்.
1901-இல் ஐந்தாவது வயதில் உள்ளூரிலிருந்த திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில்
படித்த அழகிய கூத்தர் என்பவருடன் நண்பரானார். இருவரும் இரட்டையர்களைப் போலப் பழகினர்.
இருவரும் செப்பறை திருமடத் தலைவராகிய அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி முதலான
நீதி நூல்களையும், ஆறுமுக நாவலர் ஆக்கிய பால பாடங்களையும், செப்பறை அடிகளாரிடம்
தேவார திருவாசகங்களையும் கேட்டு வந்ததால் செந்தமிழறிவும் சிவஞானமும் ஒருங்கே கைவரப்
பெற்றனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அப்போது உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. அதில் ஆறாம்
வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
இந்து கல்லூரியில் இடைகலையில் (இண்டர் மீடியட்) முதன்மையாகத் தேர்ச்சி பெற்று, 1915-இல்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றார். இவரது
பேச்சுத் திறமையை அறிந்த கல்லூரி முதல்வர், இவரை கல்லூரியின் தமிழ் சிற்றாசிரியராக
நியமித்துக் கொண்டார். அதே நேரத்தில் சென்னை சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து 1919-இல்
வழக்கறிஞர் பட்டம் பெற்றார். நெல்லைக்குத் திரும்பி வழக்கறிஞர் பயிற்சி பெற்றார்.
1920-இல் தனது 24-வது வயதில் நெல்லையப்ப பிள்ளை என்பவரின் மகள் ஆழ்வார் சானகியம்மாளை
மணத்துக் கொண்டார்.
தன் கல்வித் திறமையாலும் நாவன்மையாலும் கல்விப் பணியாற்றிய சேதுப்பிள்ளையை நெல்லை மாவட்ட
ஆட்சியாளர் மாவட்டக் கல்விக்குழுவின் உறுப்பினராக்கினார். 1924-இல் நடைபெற்ற நகர்மன்றத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் ஆனார். 1950-இல் தருமபுர ஆதினத்
தலைவர், பேராசிரியர் சேதுப் பிள்ளைக்குச் ‘சொல்லின் செல்வர்’ எனும் பட்டத்தைச் சூட்டினார்.
1955-இல் ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் முதலாமாண்டு விருதைப் பெற்றார்.
1957-இல் சென்னைப் பல்கலைக்கழகம் ‘இலக்கியப் பேரறிஞர்’ எனும் பட்டத்தை வழங்கிச்
சிறப்பித்தது.