| Profession | அறிஞர் |
|---|
சேலம் திருச்செங்கோடு உஞ்சனைக் கவுண்டம்பாளையம் சிற்றூரில் திருமதி பொன்னம்மாள் –
திரு.வி.வை. முருகேசன் தம்பதியருக்கு 1936-இல் பிறந்தார். நெசவுக் குடும்பம்.
தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியிலும், உலகப்பம்பாளையத்தில் நடுநிலைக் கல்வியையும்,
திருச்செங்கோடு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். இலயோலா கல்லூரியில்
கணிதப் பிரிவில் இண்டர் மீடியட் முடித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆனர்ஸ்
படித்தார்.
1956-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற
கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசுகளையும், தங்கப் பதக்கத்தினையும் பெற்றார். அதே ஆண்டு
மயிலாப்பூர் திருவள்ளுவர் மன்ற கடடுரைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். 1961-இல்
மதுரையிலிருந்து வெளிவந்த ‘தமிழ்நாடு’ நாளிதழ் நடத்திய கட்டுரைப் போட்டியிலும் முதல்
பரிசு பெற்றார்.
பின்னர் எம்.ஏ., எம்.லிட்., டி.லிட். போன்ற பட்டங்களைப் பெற்றதுடன் தெலுங்கு, மலையாளம்,
கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்றார்.
1957-இல் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பதவியில் சேர்ந்தார்.
ஓர் ஆண்டு பணிக்குப் பின் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் புலவர் குழுவில்
இடம்பெற்று பதிப்பாசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இருபது ஆண்டுகளுக்கு
மேலாக இத்துறையில் இடைவிடாது உழைத்து 150-க்கு மேற்பட்ட அகர வரிசைகளை தனி ஒருவராக
உருவாக்கி ஒரு சாதனையை ஏற்படுத் தினார்.
கருத்துக் களஞ்சியம், இருபெயர்ரெட்டுச் சொல்லகராதி, வசைமொழி அகராதி, நயமொழி அகராதி,
திருக்குறள் பொருளடைவு, கம்பன் பற்றிய ஆய்வுகள், பழமொழி விளக்கங்கள், திராவிட
மொழிகளில் பண்பாடு: ஒரு ஒப்பீட்டாய்வு, இக்கால தமிழ் ஆங்கில அகராதி ஆகியவை இவரது
இச்சாதனைக்குச் சான்றுகள்.
இவரது அயராத பணியின் பலனாக 1974-இல் ஈரோட்டில் உள்ள கோவை மாவட்டத் தமிழ்க் கவிஞர்
மன்றம் இவருக்குப் ‘பன்மொழிப் புலவர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனது மணிவிழாவில் அன்றைய (1982) தமிழக ஆளுநர்
சாதிக்அலி மூலமாகச் ‘சொல்லாய்வுக் கலைச் செல்வர்’ பட்டத்தை வழங்கியது.
இவரது வாழ்க்கைப் பயணம் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் நாளில் முடிவு அடைந்தது.