| Profession | அறிஞர் |
|---|
தஞ்சாவூரில் ‘பாவலரேறு’ பாலசுந்தரம் – பா.பங்கயவல்லி தம்பதியருக்கு 25.7.1957 அன்று
பிறந்தார்.
கரந்தையில் இராதாகிருட்டிண தொடக்கப்பள்ளி, உமா மகேசுவரர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில்
பள்ளிப் படிப்பை முடித்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பை
முடித்து, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார்.
அக்கால கட்டத்தில் ஜெயகாந்தனும் செகாவும் இவரைக் கவர்ந்தனர். ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல்களில் சமுதாய உணர்வு’ எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞருக்கு ஆய்வு செய்தார்.
இக்காலகட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
இடதுசாரி இயக்கத்தினரின் தொடர்பும் கிடைத்தது. தமுஎச. தஞ்சை நகரக் கிளை நடத்திய
‘நடப்பு’ தட்டச்சு இதழில் இரண்டாண்டுகள் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
‘தெ.ச.சொக்கலிங்கத்தின் காந்தி இதழ் : ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்
பட்டம் பெற்றார்.
கரந்தை புலவர் கல்லூரியில் 1983-இல் ஊதியமின்றி தற்காலிக ஆசிரியர் பணியில் சேர்ந் தார்.
பிறகு 1984-இல் முறைப்படி ஆசிரியராக நியமனம் பெற்றார். 25 ஆண்டுகால கல்லூரி
ஆசிரியர் வாழ்க்கைக்குப் பின் பணிநிலைவு பெற்றார். கரந்தை கல்லூரியிலிருந்து வெளிவரும்
‘தமிழ்ப்பொழில்’ இதழில் அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதினார்.
இவரது முனைவர் பட்ட ஆய்வேட்டை ‘டி.எஸ்.சொக்கலிங்கம்: அரசியல் இதழியல்’ எனும் தலைப்பில்
1998-இல் நூலாக வெளியிட் டார். ‘அடிவானம் நோக்கிச் சில அடிகள்’ (2000), ‘சங்க
இலக்கிய உரைகளும் கரைகளும்’ (2006), தொல்காப்பியம் பாலபாடம் (2014) ஆகிய நூல்களையும்
எழுதியுள்ளார்.
‘தமிழ் இனி 2000’ நவீன இலக்கியத்திற்கான உலகத் தமிழ் மாநாடாக நடைபெற்றது. இதில்
வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து பதிப் பித்து வெளியிட்டுள்ளார்.
இவரது நெறிகாட்டலில் 16 பேர் ‘முனைவர்’ பட்டமும், 60 பேர் ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டமும்
பெற்றுள்ளனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தேசிய அளவிலான சுவடிகள் திரட்டும் இயக்கத்தின்
துணை ஒருங்கிணைப்பாளராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி புத்தொளிப்
பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தேசிய, மாநில அளவிலான 31 கருத்தரங்கு களில் பங்கேற்றுள்ளார். செம்மொழிக் கருத் தரங்கம்
பதினொன்றிலும், செம்மொழி பயில ரங்கம் முப்பத்தொன்றிலும் பங்கேற்றுள்ளார். சாகித்ய அகாதெமி
கருத்தரங்குகளில் பங்கேற்று மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். 2007-இல் கோவையில்
நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் ‘சுவடிச் சான்றில்லாப்
பாடங்களின் வன்மை மென்மைகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளார்.