| Profession | எழுத்தாளர் |
|---|
கரூரில் பி.எஸ். சுப்பிரமணியம் – கே.ஜானகி தம்பதியருக்கு 01.07.1957 அன்று
பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணன். திருப்பூரில் அதிக காலம் வாழ்ந்ததால் தன் பெயருக்கு
முன்னால் திருப்பூர் என சேர்த்துக் கொண்டார்.
திருப்பூரிலுள்ள சிக்கண்ணா கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். அப்போதே இவரது
‘நானும் நானும்’ என்ற முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. ஒரு நாள் வகுப்பறையில்,
தமிழ்ப் பேராசிரியர் முப்பால்மணி ‘தாமரை’ இதழில் வெளிவந்த ஒரு சிறு கதையை வாசித்துக்
காட்டி, “இந்தக் கதையை எழுதியது இவர்தான்” என மாணவர்களுக்கு திருப்பூர் கிருஷ்ணனை
அறிமுகப்படுத்தி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கோவை பூ.சா. கோ. கலை அறிவியல் கல்லூரி யில்
எம்.ஏ. பட்டம் பெற்றபின்,
சென்னைக்குச் சென்று திரு. நா.பார்த்தசாரதியின் ‘தீபம்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார். அப்போது, தினமணிக் கதிரில் கதைகள் எழுதினார். பின்னர், தினமணி கதிரில்
வேலைக்குச் சேர்ந்தார்.
1984-இல் சென்னையிலுள்ள கேந்திர வித்தியாலயாவில் துணை முதல்வராக பணியாற்றிய
வி.ஜானகியுடன் திருமணம் நடைபெற்றது. அரவிந்தன் என்றொரு குழந்தை. அக்குழந்தைக்கு
நா.பா.-வின் துணைவியார் ‘குறிஞ்சி மலர்’ புதினத்தின் நாயகன் பெயரைச் சூட்டினார்.
‘தினமணி’யில் கால் நூற்றாண்டு காலம் பணி யாற்றியபின் அடுத்தடுத்து ‘அம்பலம்’, ‘சென்னை
ஆன்லைன்’ ஆகிய இணைய இதழ்களில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இப்போது ‘அமுதசுரபி’
இதழின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கஸ்தூரிரங்கன், ஐராவதம் மகாதேவன், என்.எஸ்.சிவராமன், நா.பார்த்தசாரதி, கே.ஆர்.
வாசுதேவன், சுஜாதா ஆகிய ஆறு ஆளுமை களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
இதற்கிடையில் ‘இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் தொன்மம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சிவப்பாய் சில மல்லிகைகள், பட்டொளி வீசி (சிறுகதைகள்); ஸ்ரீ அன்னை, அரவிந்த அமுதம்,
கண்ணன் கவிதைகள், அபூர்வ ராமா யணம் (ஆன்மீகம்); இலக்கிய முன்னோடிகள், சுவடுகள்
(எழுத்துலக அனுபவங்கள்), கோதை நாயகியின் இலக்கியப் பாதை, இந்திய இலக்கியச் சிற்பிகள்
வரிசையில் நா.பார்த்தசாரதி வாழ்வும் பணியும் (ஆய்வுகள்), நளசரிதம் (உரைநடை) ஆகிய
நூல்களை எழுதியுள்ளார்.
இவரது ‘இலக்கிய முன்னோடிகள்’ எனும் நூல் பாரதியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை
மாணவர்களுக்குப் பாடத் திட்டமாக வைக்கப் பட்டுள்ளது. ‘இலக்கியச் சிந்தனை’ விருது, ‘பாஞ்
சன்யம்’ விருது, ‘அனந்தாச்சாரி அறக்கட்டளை’ விருது, ‘லில்லி தேவசிகாமணி’ விருது,
ஹரிவம்சராய் அகில இந்திய ஆசிர்வாத் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.