| Profession | அறிஞர் |
|---|
விழுப்புரம் எண்ணாயிரம் உ.சுப்பராய பிள்ளை -காமாட்சி தம்பதியருக்கு 29.08.1950 அன்று
பிறந்தார்.
எண்ணாயிரம் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை
படித்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மயிலம்மை முருகன் கோயில் திருவிழாவில்
சொற்பொழிவாற்றிய திருமுருக கிருபானந்த வாரியாரின் கேள்விக்குச் சரியான பதிலளித்து
“அந்தத் திருநாவுக்கரசு போல நீ வர வேண்டும். இனி இந்த முருகனே உன் வழிபடு கடவுள்,
இதோ உள்ள சிவஞான பாலயசுவாமிகளே உன் குரு; தமிழே உனக்கு நூல்” என்று திருநீற்று
பிரசாதமும், கந்தர் அநுபூதி நூலும் வழங்கி வாழ்த்தினார்.
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் பட்டம் (1971)
பெற்றார். 1972-இல் சென்னையில் தமிழாசிரியர் பயிற்சி கற்று சான்றிதழ் பெற்றார்.
திண்டிவனம் தேசிய உயர்நிலைப் பள்ளியில் விடுப்புப் பணியிடத்தில் ஒரு மாத காலமும்,
முட்டத்தூர் ஒய்க்காப் உயர்நிலைப் பள்ளியில் 1973-74 கல்வியாண்டிலும் தமிழாசிரியராகப்
பணிபுரிந்தார்.
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1975-95இல் பேராசிரிய
ராகவும், 1995-2009 இல் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
1976இல் பி.லிட். பட்டமும், 1979இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முது கலைப்
பட்டமும் பெற்றார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
வழிகாட்டுதலில் ‘திருப்புகழில் மெய்ப் பொருளியல்’ என்னும் பொருண்மையில் 1998-இல் முனைவர்
பட்டம் பெற்றார்.
சு.திருநாவுக்கரசு ‘சிவஞான முனிவர் பிள்ளைத்தமிழ் நூல்கள் : ஓர் ஆய்வு’, ‘திருஞான
சம்பந்தர் வரலாறு’, ‘நால்வர் மணிமாலை : ஓர் ஆய்வு’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். உரை
நூல்கள் – 3, தொகுப்பும் பதிப்புமாக – 3 நூல்கள் ஆகியவற்றைத் தந்துள்ள இவர், 15க்கும்
மேற்பட்ட அரங்கங்களில் கவிதை பாடியுள்ளார்.
இவரது நெறியாள்கையில் இருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். மூவர் ஆய்வேடு அளித் துள்ளனர்.
ஒன்பது ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகத்திலும் சமயம் சார்ந்த பணிகளிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட
செயலாற்றியுள்ளார்.
திருப்புகழ் அமுதனார், கற்பனைக் களஞ்சிய நம்பி, செஞ்சொற்புலவர், அருள்நெறிக் காவலர்,
திருப்புகழ்த் தமிழ்க்கடல், செந்தமிழ் மாமணி, செஞ்சொற்கொண்டல், சித்தாந்த சைவச் செம் மணி,
சிறந்த தமிழறிஞர், திருப்புகழ்ச் செம்மணி, நிகரற்ற செயல்திறன், சேவைச் செம்மல், சித்தாந்த
வித்யாநிதி, உரைஞான கலாநிதி, வாசக வள்ளல், செந்தமிழ் நாவலர், சித்தாந்தச் செம்மல் ஆகிய
பட்டங்களைப் பல்வேறு தமிழ் அமைப்புகள், வழங்கப் பெற்றுள்ளார்.