| Profession | அறிஞர் |
|---|
மதுரையில் 30.11.1952 அன்று பிறந்தார். தந்தை கோ.கிருஷ்ண மூர்த்தி, தாயார்
கி.இரத்தினம்மாள்.
தொடக்கக் கல்வியை செனாய் நகர் பள்ளியிலும் (ஆத்து ஸ்கூல்) மதுரை அமெரிக்கன் கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் 1961 – 1966இல் தொடர்ந்துள்ளார். 1965-இல் நடைபெற்ற இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்று மதுரை வடக்கு மாசி வீதியில் அரிவாள் வெட்டையும்,
கண்ணீர்ப் புகைக் குண்டையும் அனுபவித்துள்ளார்.
கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் (வேதியியல்) பட்டமும்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் (தமிழ்) முதுகலைப் பட்டமும், பத்துப் பாட்டில் ஆய்வு
செய்து எம்.ஃபில் பட்டமும், ‘தொல்காப்பியமும் இலக்கிய வகை வளர்ச்சியும்’ என்ற தலைப்பில்
முனைவர் பட்டமும் பெற்றார்.
கி.இராசா இருபத்தெட்டு நூல்களை எழுதி யுள்ளார். ‘மக்கள் தகவல் தொடர்பியல் அறிமுகம்’
எனும் நூல் தமிழக அரசின் சிறந்த நூல் விருதையும், ‘தினம் ஒரு திருக்குறள்’ திருச்சி
மாவட்ட சமூக நலப் பணிக் குழு, மாவட்ட நிர்வாகத்தின் விருதையும் பெற்றது.
இளங்கலை பயிலும்போது ‘சின்ன சின்ன’ எனும் கவிதை நூலை மதுரை காமராசர் பல்கலைக்கழக
தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன், ஆங்கிலத்துறை பேராசிரியர் வெங்கடாசலம்,
அலுவலர் ரமணகங்கா ஆகியோருடன் இணைந்து வெளியிட்டுள்ளார். பிரேமா நந்தகுமார் எழுதிய
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்று நூலை மொழி பெயர்த்துள்ளார்.
1982-இல் இவருக்கும் சிவ. இராஜேஸ்வரி அம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்,
பொருளியல் துறையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர். எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்
பயின்றுள்ளார். இரா.பார்த்தீபன், இரா.பிரதீபன் என இரு மகன்கள்.
1971 — 1978 இல் கோவை மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கூட தொழில் நுட்பநராகப்
பணியாற்றினார். 1975-இல் நெல்லை உணவுப் பகுப்பாய்வகத்தில் பணியினை மேற்கொண்டுள்ளார்.
பணிக் காலத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது மாநிலம் தழுவிய அரசு அலுவலர்
ஊதிய உயர்வுப் போராட்டத்தில் பங்கு பெற்றிருக்கிறார்.