முனைவர் இரா.பாலசுப்பிரமணியன்

முனைவர் இரா.பாலசுப்பிரமணியன்

Profession அறிஞர்

Biography

மதுரை எழுமலை கிராமத்தில் சொ.ப. இராமநாதன் – இரா.அலமேலு தம்பதியருக்கு
10.06.1954-இல் பிறந்தார்.

மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்.
தமிழ் முதுகலைப் படிப்பில் பல்கலைக்கழக முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார். ஆய்வியல் நிறைஞர்
படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம்
பெற்றார்.

பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்திலும்
பேராசிரியராகப் பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தமிழ்த் துறைத் தலைவர் ஆனார்.

2005-ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தேர்வு நெறியாளராகப் பொறுப்பேற்று
பணிநிறைவுவரை பணிபுரிந்தார்.

இரா.பாலசுப்பிரமணியன் காந்தியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். பல காந்திய சிந்தனை
நூல்களை எழுதியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘விடியல் காலம்’
எனும் சிறுகதைத் தொகுதி திருச்சி தேசியக் கல்லூரி பட்டப் படிப்பு மாணவர்களுக்கும்,
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலைத் தமிழ்த் துறை மாணவர்களுக்கும்
பாடநூலாக இருந்து வருகிறது. காஞ்சி மடம் நடத்திய இரு கட்டுரைப் போட்டிகளில் இவருடைய
‘அத்வைதமும் தேசியமும்’, ‘மூவேந்தரும் தமிழும்’ ஆகிய இரு கட்டுரைகளும் பரிசுகளைப்
பெற்றுள்ளன. நூலாகவும் வெளிவந்துள்ளன.

இவருடைய ‘சுவடுகள்’ எனும் புதினம் 1991-இல் ‘கலைமகள்’ இதழில் தொடர்கதையாக வெளியாகி
1995-இல் நூலாக வெளியானது. இந்நூல் ‘அமரர் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்
போட்டி’யில் முதல் பரிசை வென்றது. காந்தி கிராமியப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார்
கல்கலைக் கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டப் படிப்பு
மாணவர்களுக்கு பாடநூலாக இடம் பெற்றுள்ளது.

1994-இல் ‘தமிழரசி’ இதழ் நடத்திய புதினப் போட்டியில் ‘சத்திய சூரியன்’ என்ற
புதினமும், 1997-இல் ‘அமுதசுரபி’ இதழ் நடத்திய புதினப் போட்டியில் ‘சக்தி’ என்ற
புதினமும், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ‘மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்
நினைவு புதினப் போட்டி’யில் ‘பாண்டி நாயகன்’ (2006) என்ற புதினமும், ‘இலக்கிய பீடம்’
இதழ் நடத்திய புதினப் போட்டியில் ‘சத்திய தரிசனம்’ என்ற புதினமும் பரிசுகளையும்
பாராட்டுகளையும் பெற்றன. ‘தமிழர் நாட்டு விளையாட்டுகள்’ என்ற நூல் மதுரை காமராசர்
பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு பாடநூலாக இடம்பெற்றுள்ளது.

இவரது மேற்பார்வையில் பத்து ஆய்வா ளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.