| Profession | அறிஞர் |
|---|
கேரள திருவனந்தபுரத்தில், வழக்கறிஞர் பாடகலிங்கம் பிள்ளை – தங்கம்மாள் தம்பதியருக்கு
15.02.1948-இல் பிறந்தார். தாயார் தங்கம்மா தமிழறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் மகள்.
கேரள பல்கலைக் கழகத்தில் மொழியியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
1971-இல் இவருக்கும் பொதுப் பணித்துறைப் பொறியாளர் செல்லப்பனுக்கும் திருமணம்
நடைபெற்றது. இவர்களுக்கு கவிதா, அமுதா என இரண்டு மகள்கள்.
திருமணத்திற்குப் பின், கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பேரா. ஏ.
ஞானமூர்த்தி மேற்பார்வையில் ‘ஆய்வு செய்து, அறிவியல் தமிழ்த் துறையின் முதல் முனைவர் என்ற
சிறப்பை 1981-இல் பெற்றார். 1981-இல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று
ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
1982-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்
துறையில் சிறப்பு நிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், அன்னை தெரசா
பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது ‘விறகு வெட்டும் பெண்களின்
நிலை’ என்ற ஆய்வினை மேற்கொண்டார். இளம் பெண்கள் கிறித்துவச் சங்கம் வெளியிட்ட ‘நூலை
தமிழாக்கம் செய்தார். 1987-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில்
‘மருத்துவக் கலைச் சொற்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார். 1989- 2008 இல்
பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி 2008-இல் தமது 60-ஆம்
அகவையில் பணி நிறைவு பெற்றார்.
‘கலைச்சொல்லாக்கம்’ (1965), ‘கலைச்சொல் லியல்’ (2006) இவ்விரண்டும் இவரது நூல்கள்.
‘கலைச்சொல்லாக்கமும் தரப்படுத்தமும்’ இவரது தமிழாக்க நூல்.
2011-இல், அமெரிக்க மாநாட்டில் ‘கணினியில் ரோமன் வரிவடிவ ஒலிபெயர்ப்பு’,
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற உலக இணையத் தமிழ் மாநாட்டில் ‘அறிவியல் உரைக் கோவை’,
1987-இல் உலகத்தமிழ் மாநாட்டில் ‘மருத்துவக் கலைச் சொற்கள்’ 2001-இல் இணைய மாநாட்டில்
‘கலைச் சொல்லாக்கம்’, 2000-இல் சிங்கப்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் ‘இயல்பியல்
கலைச் சொல்லாக்கம்’ ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார். 1997-இல் வியன்னாவில் நடைபெற்ற
சிறப்புப் பண்பாட்டு மொழிக் கருத் தரங்கில் அறிவு உரிமை பற்றிய ஆய்வுக் கட்டுரையை
வழங்கியுள்ளார். மேலும் இலண்டன், பாரீஸ், செர்மனி, ஹாலந்து, கனடா, அமெரிக்கா,
ஆம்ஸ்டர்டாம்,சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கல்வியாளராகப் பயணம் செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’, இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின்
‘ஜீவன் பாரதி விருது’, அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் விருது போன்றவை இவரது
அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்.