முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ

முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ

Profession அறிஞர்

Biography

தேனி ஆனை மலையன்பட்டி சிற்றூரில் சுருளி – வீரம்மாள் இணையருக்கு 10.9.1944 அன்று
பிறந்தார். இயற்பெயர் இராமர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இவரது தமிழாசிரியர்
‘இளங்கோ’ எனப் பெயர் மாற்றம் செய்தார். பின்னர், இரண்டு பெயர் களையும் இணைத்து ‘இராமர்
இளங்கோ’ என வைத்துக் கொண்டார். இவரது பெரும்பாலான நூல்களில் ச.சு. இளங்கோ என்றே
குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவரது துணைவியார் பேராசிரியை இராசாமணி. இவர்களின் திருமணமானது சென்னை,
எழும்பூரிலுள்ள வெள்ளை நினைவு மாளிகையில், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி
தலைமையில், அண்ணாவின் துணைவியார் இராணி அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது. உவமைக்
கவிஞர் சுரதா தலைமையில் திருமணக் கவியரங்கம் நடைபெற்றது.

இவர், 1990-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ‘முதல் முது முனைவர்’
பட்டத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர். முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்பே குடியாத்தம் அரசு
திருமகள் கலைக் கல்லூரியில் பேராசிரியராக 1970-இல் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள்
மட்டுமே பணியாற்றினார். ‘பாரதிதாசன் கதைப் பாடல்கள்’ எனும் தலைப்பில் முனைவர் பட்டத்தை
1976இல் முடித்த பிறகு 1979 வரை பெங்களூரிவில் உள்ள ‘நிஜலிங்கப்பா கல்லூரியில்
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இணை
ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். 1994-இல் சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குநர் ஆனார்.

அக்கால கட்டத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், ஆட்சி
மன்றக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மீண்டும் பெங்களூரு நிஜலிங்கப்பா கல்லூரியில்
துறைத் தலைவர் பதவியை ஐந்து ஆண்டுகள் தொடர்ந் தார். அங்கிருந்து சென்னைப் பல்கலைக்கழகப்
பதிப்புத் துறை இயக்குநர் ஆனார். 2004 முதல் 2005 வரை பல்கலைக்கழக அண்ணா பொது
வாழ்வியல் மையத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவில் சிறப்பு நிலைப் பேராசிரியராகப்
பணியாற்றினார்.

2005 முதல் 2010 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்ட
பாரதிதாசன் இருக்கையின் தலைவராகவும், பதிப்புத் துறையின் இயக்குநராகவும், பல்கலைக்கழகப்
பேரவை உறுப்பினராகவும் செயலாற்றினார். 2010-இல் சென்னையிலுள்ள இராமசாமி நினைவுப்
பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயத்திற்குச் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியில்
சேர்ந்தார்.

சாகித்ய அகாதமி விருது தேர்வுக்குழு, ஆதித் தனார் விருது தேர்வுக்குழு
உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.