மா.நன்னன்

மா.நன்னன்

Profession அறிஞர்

Biography

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள திருமுட்டம் காவனூரில் ச.மாணிக்கம் -மீனாட்சி
தம்பதியருக்கு 30.07. 1923 அன்று பிறந்தார். இயற்பெயர்: திருஞான சம்பந்தன்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது 1945-இல் தமிழ் மீது கொண்ட பற்றினால், தம் பெயரை
‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார். அதே ஆண்டு, நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்
பெரியாருடன் மேடையில் மாணவப் பேச்சாளராக பேசுவதற்கான வாய்ப்பை மணவழகனார் ஏற்படுத்திக்
கொடுத்தார். இவரது பேச்சைக் கேட்ட பெரியார், இவரை விடுமுறை நாட்களில் தன்னோடு
இருக்குமாறு அழைத்துச் சென்றார். பெரியார் வீட்டு முகவரியில் ஆசிரியர் பணிக்காக பல
பள்ளிகளுக்கு விண்ணப்பித்தார். சில பள்ளிகளிலிருந்து வந்திருந்த பணி ஆணைகளில், சென்னை
சூளையில் உள்ள இந்து யூனியன் செகண்டரி பள்ளி ஆணையை பெரியார் தேர்ந்தெடுத்துக்
கொடுத்தார். 1948-இல் சூளையில் ஆசிரியர் பணியைத் தொடங்கிய நன்னன், பல்வேறு ஊர்களில்
பணியாற்றி, 1972-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார்.

இதற்கிடையில், 01.07.1951-இல் விருத்தாசலம் பார்வதியைச் சுயமரியாதைத் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள்; ஒரு மகள். மகன் அண்ணல் மருத்துவர். 36-ஆம் வயதில்
இறந்தார். அவரது நினைவாக ‘நன்னன் – அண்ணல் நினைவுப் போட்டிகள் நடத்தி, அவர் பிறந்த சூலை
30-இல் பரிசளித்து வந்தார்.

1980-இல் ‘தொல்காப்பியத்தின் பேராசிரியர் உரைத்திறன்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
முனைவர் பட்டம் பெற்றார். இதே ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப்
பணியேற்றார். 1983-இல் பணி நிறைவு பெற்றார்.

1989-இல் வயது வந்தோர் வாரியத் துணைத் தலைவரானார். பொதிகைத் தொலைக்காட்சி யில் 17
ஆண்டுகள் ‘எண்ணும் எழுத்தும்’ கற்பித்தார். மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் மொழியை
பிழையின்றி எழுதுவதற்கும், வாக் கியங்களை முறையாக அமைப்பதற்கும் ஆலோசனை வழங்கினார்.

பெரியாரைப் பற்றிய 57 நூல்கள் உள்ளிட்ட 65 நூல்களை எழுதியுள்ளார். ‘திருக்குறள் கலைஞர்
உரை’ நூலைத் தனது 16 பக்க பதிப்புரையுடன் பதிப்பித்தார்.

திராவிடர் கழக கைலாசம் அறக்கட்டளையின் ‘பெரியார் பேருரையாளர் விருது’ (1982),
தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’ (1997), தி.மு.க. முப்பெரு விழாவின்
‘பெரியார் விருது’ (1996), மதுரை பல்கலைக் கழகத்தின் ‘தமிழ்ச் செம்மல் விருது’,
தமிழ்நாடு திரைப்படக் கழக விருது, சேலம் தொல்காப்பியப் பேரவை விருது போன்றவற்றை
பெற்றுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த புலவர் மா.நன்னன் தனது இறுதி காலம் வரை
பகுத்தறிவுச் சிந்தனையுடன், தமிழ் மொழிக்காக உழைத்தார். 7.11.2017 அன்று தனது
94-ஆவது வயதில் காலமானார்.