மா.நடராசன்

மா.நடராசன்

Profession எழுத்தாளர்

Biography

பிறந்தது மாந்தே கவுண்டன்புதூர். பெற்றோர்: மாரப்ப கவுண்டர் – மாரியம்மாள். பிறந்த தேதி:
11.11.1952.

1960-இல் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், கம்பாளப்பட்டி, பல்லடத்தில் பள்ளிக்
கல்வியையும் பயின்று, 1967-இல் பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில்
பி.யு. சி.யில் சேர்ந்தார். சிக்கண்ணா அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் பட்டம் பெற்றார்.

அக்கால கட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் நடராசன் கலந்து கொண்டு சிறை சென்று
விடுதலையானார். கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

1975-இல் பூ.சா.கோ. கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் திருத்துநர் பணி கிடைத்தது.
அப்போது அன்றைய அரசு புகுமுக வகுப்பை கல்லூரியிலிருந்து நீக்கிவிட்டு
பள்ளிக்கூடத்திலேயே +1, +2 வகுப்புகளைக் கொண்டு வந்ததால் இரண்டு ஆண்டுகளில் இவர் வேலை
பறிக்கப்பட்டது. டி.ஐ. சைக்கிள் கம்பெனியில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்காக
நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப் பட்டார்.

1982-இல் திருமணம். மனைவி: பாப்பாள். 1983-இல் சி.பி.எம். கல்லூரியின் துணைப்
பேராசிரியராகப் பணி ஏற்றார். பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்து 1991 முதல்
1998 வரை கிளை, கோவை, நீலகிரி அடங்கிய ஏழாம் மண்டலப் பொறுப்பாளராக ஆசிரியர்
சங்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

மா.நடராசன் 1990-களில் இருந்து தாமரை, ஆனந்த விகடன், சுரபி, ஏர் உழவன், உழவன் முரசு
போன்ற இதழ்களில் அவ்வப்போது சிறு கதைகள், கவிதைகள் எழுதி வந்தார். இரு புதினங்களையும்,
நான்கு சிறுகதைத் தொகுதிகளையும், இரு திறனாய்வு நூல்களையும், ஒரு கட்டுரைத்
தொகுதியையும், ஒரு வாழ்க்கை வரலாற்று நூலையும், ‘சுற்றுலாவியல்’ (2004) எனும்
அண்ணாமலை பல்கலைக் கழகப் பாடத் திட்ட நூலையும், ‘காற்றில் ஓர் உலா’ எனும் வானொலி உரைத்
தொகுதி நூலையும் எழுதி யுள்ளார். மேலும் ‘கவிஞர் சிற்பியின் படைப் புலகம்’, ‘கவிஞர்
புவியரசுவின் படைப்புலகம்’, ‘பேரா.ம.ரா.போவின் ஆய்வுத்தடம்’, பாரதியார் சரித்திரம்
ஆகிய நூல்களின் பதிப்பாசிரியராக பணியாற்றியுள்ளார். புஷ்கின் லிட்டரரி கிளப் இவரது
‘வாசல்கள் ஆகும் எல்லைகள்’ என்ற கவிதைக்கு முதல் பரிசு வழங்கியது. 2001 இலக்கியப்
போட்டியில் ‘ஊர் கலைஞ்சு போச்சு’ புதினத்திற்கு பரிசு கிடைத்தது. தமிழக அரசின் சிறந்த
நூலுக்கான பரிசு ‘பிரதிபா இராச கோபாலன் புனைகதை இலக்கியம் ஓர் ஓய்வு’ (2001)
நூலுக்குக் கிடைத்தது.

பாரதியார் பல்கலைக் கழகம் 2008-இல் ‘தமிழ்ச் சான்றோர்’ விருது வழங்கி இவரைச்
சிறப்பித்தது.