பொ.வேல்சாமி

பொ.வேல்சாமி

Profession அறிஞர்

Biography

விருதுநகர் பாலவ நத்தம் கிராமத்தில் பொம்மைய்யா நாயக்கர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு
1951-இல் பிறந்தார். அப்பா, தஞ்சாவூரில் ஒரு முட்டைக் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை
செய்து கொண்டிருந்ததால் 1958-இல் குடும்பத்தை தஞ்சாவூருக்கே அழைத்துக் கொண்டார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும்
வாய்ப்பைப் பெற்ற இவர், அப்புத்தகங்களின் மூலமாக மன்னர்கள் முதல் சாமான்யர் வரையிலான
வாழ்க்கைச் சூழலை அறிந்துகொண்டார்.

பூண்டி கல்லூரியில் பி.யூ.சி. புதுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ‘குஜிலி
மார்க்கெட்’டில் (பின்னாளில் சரபோஜி மார்க்கெட்) இருந்த அப்பாவின் கடையில் வேலை
செய்துகொண்டிருந்தார். அந்த மார்க்கெட்டுக்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களை நேரில்
பார்ப்பதற்கும் பழகுவதற்குமான வாய்ப்பு கிடைத்தது.

மேலும், தஞ்சை பகுதி என்பது மன்னர்கள், பெரிய கோயில், அரண்மனை, ராஜவீதி என தொன்மைச்
சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் வாய்ந்தது மட்டுமல்ல, இதற்குள் நிலப்பிரபுத்துவ
கொடுமையும், பண்ணையடிமை முறையும், சாதியக் கொடூரங்களும், பெண்ணடிமைத் தனங்களும்
வேரூன்றி இருப்பதை அவர் கண்டுணர்ந்தார். இதற்கான காரணங்களை புத்தக வாசிப்பின் வழியே அவர்
தேடிக் கண்டடைய விருப்பம் கொண்டார். ஆகவே, அவரது தீவிர வாசிப்பு என்பது சமூகம் சார்ந்த
தேடலாக அமைந்தது.

கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவருக்குப் படித்தார். தஞ்சை தமிழ்ப்
பல்கலைக்கழகத்திற்கு இலங்கையிலிருந்து வருகை தந்த கா.சிவத்தம்பி, டேனியல் ஆகியோரிடம்
விவாதித்திருக்கிறார்.

தமிழில் ‘இசங்கள்’ அறிமுகமான காலத்தில் பேரா.அ.மார்க்ஸ், எழுத்தாளர் இரவிக்குமார்
போன்றவர்களோடு இணைந்து 1990-இல் ‘நிறப்பிரிகை’இதழைத்தொடங்கி நடத்தினார்கள். இவ்விதழில்
தமிழ், தமிழ்ச்சமூகம், மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் சார்ந்த தனது
கூர்மையான கண்ணோட்டத்தை பொ.வேல்சாமி கட்டுரைகளாக எழுதினார். தமிழ்ப் பதிப்புலகம்
குறித்தும் எழுதியிருக்கிறார்.

‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’, ‘கோவில் நிலம் சொத்து’, ‘பொய்யும் வழுவும்’ போன்ற
நூல்களையும் எழுதியுள்ளார். பேரா. அ.மார்க்ஸ் அவர்களுடன் இணைந்து ‘விளிம்பு நிலை
ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்’ எனும் நூலை தொகுத்துள்ளார்.

பொ.வேல்சாமி, தமிழ்ப் புலவருக்குப் படித்த போதிலும், அத்துறை சார்ந்த பணியில் சேராமல்,
சொந்தமாக முட்டைக் கடை நடத்திக்கொண்டு, ஆய்வுப் பணியைச் சுதந்திரமாகவும், மகிழ்ச்சி
யுடனும் செய்துகொண்டிருக்கிறார்.