பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

Profession அறிஞர்

Biography

நெல்லை மாவட்டம், சிக்கநரசய்யன் எனும் சிற்றூரில் சரவணப் பெருமாள் – பாப்பம்மாள்
தம்பதியருக்கு 12.10.1891 அன்று பிறந்தார்.

திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கல்வி கற்றார். 1912-இல்
பி.ஏ. பட்டம் பெற்றார். இவ் வாண்டு, எழுத்தாளர் இராஜ சுந்தரம் மகள் சிவகாமியுடன்
இவருக்குத் திருமணம் நடை பெற்றது. 1914-இல் பி.எல். பட்டம் பெற்று, 1922 வரை
திருவனந்த புரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் இவருக்கு
கே.என்.சிவராச பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மகாகவி பாரதி ஆகியோருடன்
தொடர்பு ஏற்பட்டது. பாரதி பற்றிய அருமையான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.
பாரதியின் சீடர் கனகலிங்கம் எழுதிய ‘என் குரு நாதர் பாரதியார்’ என்ற நூலைப்
பதிப்பித்தார்.

1926 நவம்பரில் வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடைபெற்று முழு நேரத் தமிழ்த் தொண்டாற்றத்
தொடங்கினார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி உருவாக்கப் பணியில் 1926-1936-இல்
ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றியதற்காக சென்னை அரசாங்கம் இவருக்கு
1938-இல் ‘இராவ் சாகிப்’ பட்டமளித்துச் சிறப்பித்தது. இக்கால கட்டத்தில் 21 நூல்களைப்
பதிப்பித்தார். 1946-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

‘கலைமகள்’ இதழை 1932-இல் தொடங்கிய போது அதன் ஆசிரியர் குழுவினரில் ஒருவராகச்
செயலாற்றினார்.

1939-இல், 1,590 செய்யுட்கள் அடங்கிய ‘புறத் திரட்டு’ நூலை சென்னைப் பல்கலைக்கழகம்
மூலமாக பதிப்பித்தார்.

1947-50இல் திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், 1948-49இல் சென்னை மாநில
பாடப்புத்தகத் தேர்வுக்குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.

திருவனந்தபுரத்திலுள்ள திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் 1949 சனவரி 24-29இல் ‘தமிழ்
இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’ எனும் தலைப்பில் விரிவான சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இவர் 38 தமிழ் நூல்களின் நல்ல பதிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

1950-இல் ‘கம்பன் நிலையம்’ எனும் பெயரில் ஒரு புது வீடு கட்டிக் குடியேறினார்.

திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் 1951இல் பேராசிரியர் பொறுப்பேற்று 1954இல் ஓய்வு
பெற்றார்.

1955-இல் சென்னை எழுத்தாளர் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் ‘கம்பன் காவியம்’
வெளியிடப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் ‘இலக்கிய மண்டலம்’ என்ற பொதுத்
தலைப்பில் 18 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 17.02.1956-இல் இயற்கை எய்தினார்.