பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன்

Profession அறிஞர்

Biography

தென்காசி அய்யாபுரம் கிராமத்தில் மு.பிச்சைமுத்து – கனியம்மாள் தம்பதியருக்கு
16.05.1939 அன்று பிறந்தார்.

பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் 1959-இல் பொருளாதாரத்தில் இளங் கலை பட்டமும்,
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1961-இல் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1961 சூனில் ‘இன்பவல்லி’ அவர்களை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு
முத்துச்செல்வி, கலையரசி, முத்தமிழ்ச்செல்வன், அன்புச்செழியன் என இரண்டு மகள்கள், இரண்டு
மகன்கள்.

1961-இல் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார்.
1963-இல் விரிவுரையாளரானார். 1977-இல் சென்னை சி. கந்தசாமி நாயுடு ஆடவர்
கல்லூரிக்கு மாறுதல் பெற்றார். 1978-இல் மீண்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு மாறுதல்
பெற்றார். 1984-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘வாணி தாசன் கவிதைகள் ஓர் ஆய்வு’ எனும்
ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

1996இல் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆயர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். 1997இல்
கல்லூரி முதல்வர் பணியிலிருந்து பணி நிறைவு பெற்றார். இவரது நெறிப்படுத்துதலில் 15
மாணவர்கள் இளமுனைவர் பட்டமும், 5 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும் பெற்றனர்.

இவரது படைப்புகள் நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை, இதழியல் என 21 நூல்களாக
வெளிவந்துள்ளன.

பேரறிஞர் அண்ணா நிறுவிய ‘காஞ்சி’ இதழில் 1973-இல் கௌரவப் பொறுப்பாசிரிய ராகப்
பணியேற்றார். 2003-இல் ‘தமிழாலயம்’ என்னும் சமூக இலக்கிய இருமாத இதழைத் தொடங்கி 12
ஆண்டுகளாக நடத்தினார். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்திலும், தமிழ் ஆசிரியர் கழகம்
ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

சிறு வயது முதலே நடிப்பில் நாட்டம் கொண்ட இவர், கல்லூரிக் காலத்தில், கவிஞர்
தஞ்சைவாணனின் ‘புலவர் புல்லையா’ நாட கத்தில் முக்கிய வேடமேற்று நடித்தார். காஞ்சி
பச்சையப்பன் கல்லூரிக் கட்ட வளர்ச்சி நிதிக்காக ‘மனமாற்றம்’ நாடகத்தில் நடித்து கவிஞர்
கண்ணதாசனிடம் வெள்ளிக் கோப்பை பெற்றார். ‘மணமல்லி’ எனும் தனது நாடகத்தை புத்தகமாகவும்
வெளியிட்டார். ஏ.எஸ்.பிரகாசம் எழுதி இயக்கிய இரண்டு படங்களில் நட்புக்காக நடித்தவர்,
‘ஆயிரம் நிலவே வா’ ‘ஆளப்பிறந் தவன்’ ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடும் படியான
வேடத்தில் நடித்தார்.

இவருக்கு, 1982-இல் ‘கவிதை மேகங்கள்’ நூலுக் காக தமிழக அரசின் முதல் பரிசை முதல்வர்
எம்.ஜி.ஆர். வழங்கினார். 1990-இல் திருச்சியில் நடைபெற்ற பாரதிதாசன் நூற்றாண்டு
விழாவில் ‘பாரதிதாசன் விருதும், பாராட்டுக் கேடயமும், பண முடிப்பும் முதல்வர் கலைஞர்
வழங்கினார். மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

தனது 82-ஆவது வயதில் 28.6.2020 அன்று சென்னையில் காலமானார்.