பேராசிரியர் முரளிஅரூபன்

பேராசிரியர் முரளிஅரூபன்

Profession அறிஞர்

Biography

28.05.1966 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தார். தந்தை அ.க.சுப்பிரமணியன்,
மத்திய அரசின் இறக்குமதி, ஏற்றுமதி இணைத் தலைமை நெறியாளராகப் பணியாற்றியவர். தாயார்:
ந.சாந்தகுமாரி.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த பாண்டிச்சேரி பள்ளி, கனகவல்லி தொடக்கப் பள்ளி, தேசிய
ஆண்கள் உயர் நிலைப் பள்ளி, இந்து மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியைப்
பயின்றார்.

பள்ளிப் பருவத்தில் பல்வேறு கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.
குறிப்பாக, மாநகரப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கவிதைப் போட் டியில், நோபல்
பரிசு பெற்ற சந்திரசேகர் அவர்களிடம் இரண்டாம் பரிசைப் பெற்றார்.

1989-இல் புதுக்கல்லூரியின் மாணவராக பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்தார். 1999-இல் அதே
கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்றார். முதல் மாத ஊதியத்தில் வாங்கிய முதல்
நூல் ‘சீறாப்புராணம்’. ‘சீறா வசனக்காவியம்’ எனும் தனது முதல் நூலை புதுக் கல்லூரியில்
பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் வெளி யிட்டார்.

கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண் டிருந்தபோது இவர் எழுதிய ‘பாபுராவ் பெயிண்டர்’
பன்றிய ஒரு நெடுங்கட்டுரை ‘தி இந்து’ நாளேட்டில் வெளிவந்தது.

1989-91 கல்வியாண்டில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டாம்
பரிசை முதலமைச்சர் கலைஞரிடம் பெற்றார்.

‘காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூ முகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு: ஓர் ஆய்வு’
என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

டி.எஸ்.எலியட்டின் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘கவிதையின் சமுதாயச் செயல்
பாடு’ என்ற நூலாகவும், பின்னர் ‘திராவிடர் கட்டடக் கலை’ என்ற தமிழாக்க நூலையும்
வெளியிட்டார். மேலும், புதுக்கல்லூரி மாணவர் களின் கவிதைகளைத் தொகுத்து ‘வருகை’ எனும்
நூலாகவும் வெளியிட்டார்.

இவரது துணைவியார் கவிதா. இவர்களின் மகன் நவீன்.

பேராசிரியர் முரளி அரூபன் ‘கவிதையின் சமுதாயச் செயல்பாடு’ (1998), ‘திராவிடர்
கட்டடக் கலை’ (1999) ஆகிய இரு மொழி பெயர்ப்பு நூல்களையும், ‘உமறு பாஷா யுத்த
சரித்திரம்’ (2001), ‘கிரேக்க இதிகாசக் கதைகள்’ ஆகிய கதை நூல்களையும், ‘வருகை’
(1999), ‘ஞாபகப்பிசகு’ (2000), ‘விரிந்த சிறகுகள்’ (2003), ‘குறமாது'(2003),
‘வேறு பெயர்’,’முதல் வெளிச்சம்’ (2003), ‘கவின் பரல்கள்’ (2004) ஆகிய கவிதை
நூல்களையும், ‘சாரண பாஸ்கரன் கவிதைகள் : ஓர் ஆய்வு’ (2001), ‘தமிழ் இஸ்லாமிய நாடக
வரலாறு’ (2002), ‘சீறா வசனகாவியம்’ (2010) ஆகிய உரைநடை நூல்களையும்
பதிப்பித்துள்ளார்.