| Profession | அறிஞர் |
|---|
பாளையங்கோட்டையில் பால் பூபாலராயர்- மாரியம்மாள் தம்பதியருக்கு 15.05.1940 அன்று
பிறந்தார். தந்தை ஆசிரியராகவும், வணிகராகவும் இருந்தார்.
தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பாளையங்கோட்டைத் தூய சவேரியார் உயர் நிலைப்
பள்ளியிலும் (1949-55), இளங்கலைக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சவேரியார்
கல்லூரியிலும் (1957- 60), முதுகலைப் படிப் பைக் காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும்
(1961-63) கற்றுத் தேர்ந்தார்.
புலவர் தேர்வை மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், முதுநிலைக் கல்வியியலை அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திலும், ‘தேம்பாவணித் திறன்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட (1985) ஆய்வினை மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றார். மேலும் ‘காந்தியச் சிந்தனை’ என்னும் பாடத்தில்
முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
24-ஆம் அகவையில் செயராணியை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இவர்களுக்கு அருள் இளங்கோ, பால்
கதிரவன், பதுவைப் பூங்கொடி, புதுமைத் தென்றல், வேள் பாரி, சவரி மணிமேகலை, அன்புச்
சீராளன் என நான்கு மகன்கள், மூன்று மகள்கள்.
தமிழ் விரிவுரையாளராக திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி (1960-61)-யில்
சேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்
விரிவுரையாளராகவும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராகவும், திருநெல்வேலை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராகவும் 45 ஆண்டுகள் பணியாற்றி யுள்ளார். அக்காலத்தில் இருநூற்று ஐம்பதின் மரை
புலவர் பெருமக்களாகவும், இருபதின்மரை இளமுனைவராகவும், பதின்மரை முனைவராகவும்
வழிகாட்டி நெறிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை ‘வளன் அரசு’ என மாற்றிக் கொண்டார். ‘தனித்தமிழ்
இயக்கக் கழகம்’, ‘உலகத் திருக் குறள் மையம்’, ‘இளங்கோ இலக்கியப் பேரவை’, ‘மாநிலத்
தமிழ்ச் சங்கம்’, ‘தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம்’ போன்றவற்றில் பணியாற்றினார்.
இரு நூல்களின் ஆசிரியர், முப்பது சிறப்பு மலர்களின் பதிப்பாசிரியர், பதினாறு
சிறப்பிதழ் களின் தொகுப்பாசிரியர், முந்நூற்றுக்கும் மேற் பட்ட அய்வுக் கட்டுரைகளின்
ஆசிரியர், ‘தமிழ்த் தேன்’, ‘தமிழன்’, ‘இளைஞர் குரல்’, ‘இளைஞர் முரசு’ போன்ற இதழ்களின்
ஆசிரியர் என கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். 23 ஏடுகளைப்
பதிப்பித்துள்ளார்.
‘கல்லூரி நாவலர் பேரவை’ வாயிலாக தொள்ளாயிரம் பேச்சாளர்களையும், ‘தமிழ் இலக்கியக்
கழகம்’ மூலமாக மூவாயிரம் எழுத்தாளர் களையும் இருநூறு நாவலர்களையும் இருபது
ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளார். இந்திய விடுதலைப் பொன்விழா ஆண்டில் ஐயாயிரம்
மாணவர்க்குத் திருக்குறள் சான்றிதழ், அறுபத்து நான்கு தமிழறிஞர்களுக்கு திருக்குறள்
சிறப்பு விருதுகளும் வழங்கியுள்ளார்.