பேராசிரியர் நா.இளங்கோ

பேராசிரியர் நா.இளங்கோ

Profession அறிஞர்

Biography

புதுவையில் ப.நாகமுத்து -நா.வர்ணமுத்து தம்பதியருக்கு 29.04.1959 அன்று பிறந்தார்.
தந்தை தபால்காரர்.

புதுவையில் பள்ளிக் கல்வி பயின்று,1979-இல் தமிழகத்தின் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ்க் கல்லூரியில் பி.லிட். பட்டம் பெற்றார். 1981-இல் புதுச்சேரி தாகூர் கலைக்
கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் ‘முதல் குறள்
ஆய்வு’ எனும் தலைப்பில் இளமுனைவர் பட்டம் பெற்றார். பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்
இலக்கியத் துறையில் ‘நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபு களும்’ என்ற
தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். ‘நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய
மதிப்பீடுகளும் குழந்தைப்பேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும்’ என்ற தலைப்பில்
நாட்டுப்புறவியல் பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஓர் ஆய்வேட்டை
வழங்கியுள்ளார்.

1988-இல் புதுச்சேரி இ. சாந்தியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மாறன்
என்றொரு மகன், மலர் என்றொரு மகள்.

1983 தொடங்கி 22 ஆண்டுகள் புதுவை அரசு தாகூர் கலைக் கல்லூரியில்
விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பின்னர் 2005முதல்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் ஒன்பது ஆண்டுகள் இணைப் பேராசிரியராகவும்,
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும்
பணியாற்றினார்.

இவர் ‘ஓடை’, ‘ஊற்று’ எனும் இரு இதழ்களை நடத்தியுள்ளார். புதுச்சேரி மாநில கலை
இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராகவும், புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின்
நிறுவனர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 2012-இல் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின்
சிறப்பு அழைப்பாளராகச் சென்று மூன்று நாட்கள் தனியொருவராய்ப் பயிற்சி அளித்தார்.

இவர் எழுதிய நூல்கள்: கவிதைத் தொகுதிகள் – 2, நாட்டுப்புறவியல்- 2, தமிழியல் ஆய்வு-
3, ஊடகவியல்- 1, பாடநூலாக- 1, கருத்தரங்கக் கட்டுரைத் தொகுதி-1, மற்றும்
பொருநராற்றுப் படை மூலமும் உரையும் எனும் மாணவர்களுக் கான நூல்- 1 ஆகியனவாகும். இவர்
எழுதிய ‘மலையருவி’ எனும் கவிதைக்காக ‘மலையருவி நா.இளங்கோ’ என்றும்
அழைக்கப்படுகிறார்.

நா.இளங்கோ, ‘மண்ணுரிமைக் காவலர்’, ‘செந்தமிழ் ஞானச்செம்மல்’, ‘தமிழ்ப் பணிச் செம்மல்’,
‘காமராசர் விருது’, ‘பேரறிஞர் அண்ணா விருது’ உட்பட ஏராளமான விருதுகளை தமிழ்நாடு
மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து போன்ற அயல்நாடு களுக்கும் சென்று
தம்முடைய இலக்கியப் பணி யினை மேற்கொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.