பேராசிரியர் செ.வைத்தியலிங்கம்

பேராசிரியர் செ.வைத்தியலிங்கம்

Profession அறிஞர்

Biography

கடலூர் பரங்கிப் பேட்டையில் செல்லமுத்து ஆச்சாரி – கோவிந்தம்மாள் தம்பதியர்க்கு
20.09.1926 அன்று பிறந்தார். பரங்கிப்பேட்டையில் உள்ள போர்டு உயர்நிலைப் பள்ளியில்
பள்ளிப்படிப்பை முடித்தார். 1949-இல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம்,
தத்துவத்தில் பி.ஏ. பட்டமும், தமிழ்மொழி, இலக்கியம் பயின்று எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
‘அழகுக் கலைகள் மற்றும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் காணலாகும் கைத் தொழில்கள்’ எனும்
தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார்.

1949-50 இல் விருத்தாசலம் போர்டு உயர்நிலைப் பள்ளி யில் பட்டதாரி ஆசிரியராகப்
பணியேற்றவர், 1952-57 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் தமிழ்
பயிற்றுநராகவும், 1957-80 இல் தமிழ் விரிவுரையாளராகவும் 1980-87 இல் தமிழ்ப்
பேருரையாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 01.07.1987 முதல் 30.11.1987 வரை
பதிப்பாசிரியராகவும் பெருஞ்சொல்லகராதி தயாரிப்பதிலும் ஓயாது பணியாற்றியபின்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் ஆராய்ச்சி இளைஞராக 1989 முதல் 1999 வரை
பணியாற்றினார். புகழ் பெற்ற பேராசிரியர்களான பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,
ஏ.சிதம்பரநாதன் செட்டியார், வ.சுப. மாணிக்கனார், தண்டபாணி தேசிகர், வெள்ளை வாரணனார்
ஆகியோடு பழகும் பேறு பெற்றார். சிதம்பரநாதன் செட்டியார் பெயரையே தன் மகனுக்குச்
சூட்டினார்.

திருவாவடுதுறை ஆதின குருபூசை விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றிய நிலையில்
பெரிதும் போற்றப்பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், பேரூர் சாந்தலிங்கக்
கல்லூரியிலும் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

1969-இல் நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழக இளைஞர் விழா அன்று அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் சார்பில் மாணவர்களை அழைத்துச் சென்று இயக்குநராகத் தமிழ் நாடகம் நடத்திப்
பாராட்டினைப் பெற்றுள்ளார்.

பேரா. சை.வைத்தியலிங்கம், ‘அழகு கலைத் திறன்’, ‘தமிழகக் கவின் கலைமாட்சி’,
‘அருள்வாக்கு, ‘வள்ளுவர் வாழ்வியல்’ , ‘தமிழ்ப் பண்பாடு’ பாகங்கள், 1, 2, 3, 4, 5, 6,
‘சிற்பக்கலை’, ‘பார் பரவும் பராசக்தி’ ஆகிய நூல்களை நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ‘தமிழ்ப் பண்பாடு வரலாறு’ முதல் இரண்டு பாகங்களும் தமிழ் வளர்ச்சித் துறையின்
சிறந்த நூலுக்கான பரிசை முறையே 1992, 1998 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளன.

2011-இல் மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 36-ஆம் ஆண்டு விழாவில், இவரது இலக்கியப் பணியைப்
பாராட்டி ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டத்தையும் பொற்கிழியையும் வழங்கப் பெற்றார். பெரம்பலூர்
கம்பன் கழகம், இறைநெறிக் கழகம், சன்மார்க்க சம்மன் ஆகியவை இணைந்து ‘பண்பாட்டுச் செல்வர்’
பட்டத்தையும், தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘நுண்கலைச் செல்வர்’ பட்டத்தையும் வழங்கிச்
சிறப்பித்துள்ளன.