| Profession | அறிஞர் |
|---|
தஞ்சை திருவையாறு ப.தர்மாம்பாள் – பழனிவேல் தம்பதியருக்கு 13.01.1936 அன்று
பிறந்தார்.
பள்ளிக் கல்வியை தஞ்சை கிறித்தவப் பள்ளியிலும், புகுமுக வகுப்பை திருச்சி ஹோலி கிராஸ்
கல்லூரியிலும், மேற் படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில்
விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவராகவும்,
அவினாசி லிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பல்வேறு
பொறுப்புகளை வகித்தார்.
1968-இல் இவரது திருமணம் பழனி முருகன் கோயிலில் நடைபெற்றது. கணவர் ஆராய்ச்சியாளர்
சுப்பிரமணியன். இத்திருமணத்தை தெ.பொ.மீ., பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் நடத்தி
வைத்தனர். இத்தம்பதியருக்கு அமுதவடிவு, அன்புமலர், அருள்செல்வி என மூன்று மகள்கள்.
சிறந்த பேச்சாளரான இவர் 17 நூல்களை எழுதியுள்ளார். 5 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
10 பன்னாட்டு மாநாடுகளிலும், 34 மாநில மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகள் மற்றும்
மாநாடுகளிலும், 4 பல்கலைக் கழக அறக் கட்டளைச் சொற்பொழிவுகளிலும், 24 அரசு
விழாக்களிலும், 7 புகழ் பெற்ற அமைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளையும்,
சொற்பொழிவுகளையும், கருத்துரைகளையும் வழங்கியுள்ளார்.
இவரது நெறிகாட்டலின்கீழ் 32 எம்.ஏ. ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
1954-இல் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நினைவுப் பேரவையின் முதல் பரிசு, 1955-இல்
டாக்டர் இராமநாதன் நினைவுப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, 1956-இல் மாநில
கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் பரிசு, 1956, 1957 ஆகிய இரண்டு
ஆண்டுகளிலும் கலைவிழா மற்றும் கலை அரங்கில் நடிப்பிற்கான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
முதல் பரிசுகள், 1965 முதல் 1984 வரை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில்
ஆசிரியர்களுக்கு இடையிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.
தமிழக அரசின் 1995-க்கான ‘திருவள்ளுவர் விருது’, 2001-க்கான ‘ராஜராஜன் விருது’ ,
2005-இல் ‘கலைமாமணி விருது, 1965-இல் கல்கத்தா தமிழ் மன்றத்தின் ‘செந்தமிழ்ச் செல்வி’,
1974-இல் கோவை நகர சன்மார்க்கச் சங்கத்தின் ‘அருட்பாமணி’, 1985-இல் கோவை நன்னெறிக்
கழகத்தின் ‘தமிழறிஞர்’, கோவை ரோட்டரி கிளப்பின் ‘சிறந்த பெண்மணி’, கோவை லயன்ஸ்
கிளப்பின் ‘நல்லாசிரியர்’ 1995-இல் அமெரிக்கா, இல்லி னாய்ஸ், உலகத் தமிழ்மொழி
அறக்கட்டளையின் விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.