பேராசிரியர் சா.கிருட்டிணமூர்த்தி

பேராசிரியர் சா.கிருட்டிணமூர்த்தி

Profession அறிஞர்

Biography

சிதம்பரம் வளையமாதேவியில் மு.சாமிநாதன்-சானகி அம்மாள் தம்பதியருக்கு 31.03.1951
அன்று பிறந்தார். தனது பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். இவர் 3-ஆம் வகுப்பு
படிக்கும்போது தந்தை காலமானார். தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்தார்.

1969-72 இல் விருத்தாசலம் கொளஞ்சியர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில்
இளங்கலை பட்டம் பெற்று, வேலை கிடைக்காததால் தையல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தினார்.
பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1976-78இல் எம்.ஓ.எல் படித்து பட்டம் பெற்றார். ‘இளம்
பூரணாரின் பொருளதிகார உரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இளநிலை ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1984-இல்
தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த ஓலைச் சுவடித் துறைக்கு பணிமாற்றம் பெற்றார். 1986-இல்
தமிழ்ப் பல்கலைக்கழக அகராதித் துறைக்கு மாற்றலானார். 1989-2000இல் அறிவியல் தமிழ்
மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி, 2001-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப்
பணியில் சேர்ந்தார். இவரது நான்கு வருட பணிக் காலத்தில் 156 நூல்கள் வெளியிடப்பட்டன.

இவர் கல்லூரியில் படிக்கும்போதே 1970- இல் கஸ்தூரியைக் கைப்பிடித்தார். இவர்களுக்கு
மூன்று மகன்கள், ஒரு மகன்.

பேரா.அகத்தியலிங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய போது பல்வேறு
கல்விக் கழகங்களைத் தொடங்கி வைத்தார். அவற்றுள் இன்றும் நிலை பெற்றுச் செயல்பட்டுக்
கொண்டிருப்பது ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ மட்டும்தான். இப்பெருமைக்குரியவர்கள்
பேரா.இராமசுந்தரம், பேரா.சா.கிருட்டிணமூர்த்தி, டாக்டர் நரேந்திரன் மூவரும்தான்.
இராமனுக்கோர் இலக்குவனார் போல இராம சுந்தரத்திற்கோர் சா.கிருட்டிணமூர்த்தி. இவ்விருவரின்
முயற்சியினால் தமிழில் லட்சக்கணக்கான கலைச் சொற்கள் உருவாகியுள்ளன. பண்டைத் தமிழரின்
அனுபவ அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்ந்து பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எளிய
தமிழில் அறிவியல் கட்டுரைகளை நூலாக்கம் செய்து, பல்வேறு கல்வி நிறுவனங்களோடு இணைந்து
கருத்தரங்குகள் பல நிகழ்த்தப் பெற்றுள்ளன. பணி நிறைவுக்குப் பின்னரும் பேராசிரியர் தம்
இளவலுக்கு உறுதுணையாக நின்று உதவிவருகிறார்.

சா.கிருட்டிணமூர்த்தி இயற்றிய நூல்கள் ‘சீவேந்திரர் சரிதம்’, ‘ஆத்திச்சூடி உரை’, ‘உரைச்
சொற்களஞ்சியம்’, இலக்கணச் சூடாமணி, அகத்திரட்டு, கலைச் சொல்லியல், இளம்பூரணர் உரை,
சிறிய ரத்னாகரம் ஆகியனவாகும்.

இவரது நெறியாள்கையில் 25 ஆய்வாளர்கள் ஆய்வுநிறைஞர் பட்டமும், 18 ஆய்வாளர்கள் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளனர்.