| Profession | அறிஞர் |
|---|
தஞ்சை கும்பகோணத்தில் அ.இராமலிங்கம் – சேது அம்மாள் தம்பதியருக்கு 21.10.1946 அன்று
பிறந்தார்.
குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இக்கல்லூரியில் தமிழ் மன்றச் செயலாளராகவும் இருந்துள்ளார். ‘குத்துவிளக்கு’ என்றொரு
கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியுள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை
பயின்றார். வகுப்புத் தோழர் இ.ஜே.சுந்தர் நடத்திய ‘சுட்டி’ இதழில் இவரும் இணைந்து
பணியாற்றியுள்ளார்.
1970-இல் ஜெயலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு தேவிப்பிரியா என்றொரு மகள்.
1971-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிற்றுநராக தன் பணியைத் தொடங்கி,
பேராசிரியராகப் தொடர்ந்தார். கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், நா.முத்துக்குமார்,
இளையகம்பன் ஆகியோர் இவரின் அன்பிற்குரிய மாணாக்கர்கள்.
‘குறிஞ்சி நில இயற்கையும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட்., பட்டமும்,
‘அகிலன் புதினங்களில் கதைமாந்தர்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஆர்வம்
கொண்டவர். சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர், பல்கலைக் கழக பாடத் திட்டக் குழு
உறுப்பினர், சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர், கல்கத்தாவில் உள்ள இராசாராம்
மோகன்ராய் நூலக நிதி நல்கைக் குழு நெறியாள்கையாளர், பொது நூலக ஆணைத் தேர்வுக்குழு
உறுப்பினர், சென்னை கன்னிமாரா மையப் பொது நூலகச் செயலர், சென்னை திருவள்ளுவர் இலக்கிய
மன்றச் செயலர், குடந்தை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய செயலர் என்று அவர்தம்
பொறுப்புகள் தொடர்ந்த வரலாற்று நிகழ்வாக உள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்
குழுவில் இடம்பெற்றுத் தக்க கருத்துகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பு மதிப்பீட்டு வல்லுநராகவும் இருந்து
வருகிறார். இவர்தம் வழிகாட்டுதலில் 16 பேர் முனைவர் பட்டமும், 50 பேர் இளம் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளனர்.
இவரது படைப்புகள் அமுதசுரபி, கல்கி, ஆனந்த விகடன், புத்தகம் பேசுது, தீராநதி,
தாமரை, கணையாழி, இனிய உதயம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
கவிதை, கதை, புதினம், ஒப்பாய்வு, மொழி யாக்கம் என 50க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியுள்ளார். இவரது சில சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘ஒப்பிலக்கிய மாமணி’, ‘சங்க இலக்கியச் செம்மல்’, ‘இலக்கிய மாமணி’ போன்ற விருதுகளைப்
பெற்றுள்ளார்.