| Profession | அறிஞர் |
|---|
செங்கல்பட்டு மாவட்டம், அங்கம்பாக்கம் முத்தியப்பன் -வள்ளியம்மை தம்பதியருக்கு 5.07.1914
அன்று பிறந்தார்.
அங்கம்பாக்கம், வாலாசாபாத் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1928-இல் இவர்தம் 14-ஆம்
வயதில் தந்தை இறந்தார். 17-ஆம் வயதில் அன்பு காட்டி வளர்த்த பாட்டியும் இறந்தார். மறு
மாதமே அதே தெருவில் வசித்த ஒருவரை பொருந்தா மணம் செய்து வைத்தனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வித்துவான், பி.ஓ.எல். பட்டம் பெற்று, காஞ்சி ஆந்திரசன்
பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார். சந்திராமணி-யை இரண்டாவது மணம் புரிந்தார்.
வள்ளியம்மை, மங்கையர்க்கரசி என இரு மகள்கள், மெய்கண்டர் என்றொரு மகன்.
1941-இல் தாயார் இறந்தார். இறுதிச் சடங்கை திரு.வி.க. நடத்தி வைத்தார். 1944-இல்
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். 1961-இல்
தமிழ்த்துறைத் தலைவரானார். பின்னர் துணைமுதல்வர் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பணியாற்றி
1976-இல், 62-ஆவது வயதில் பணிநிறைவு பெற்றார். இடையில், மதுரை தியாகராசர்
கல்லூரியில் 1958-59இல் ஓராண்டு தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் அறிஞர் குழு, பாடநூற்குழு, அகராதிக் குழு, சொற்பொழிவாளர்
தேர்வுக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றினார். கல்லூரிப்
பாடத்திட்டத்தில் இரண்டாம் நிலையில் இருந்த தமிழைத் முதல் நிலைக்குக் கொண்டு வந்தார்.
நாட்டுப்புறவியலை ஒரு பாடமாக இடம்பெறச் செய்தார். மலாய்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அமைய
முக்கிய காரணமாவார்.
1947-இல் வாலாஜாபாத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளிக் குழுவை அமைத்து, 25 ஆயிரம் வசூலித்து,
அரசு அளித்த 6 ஏக்கர் நிலத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். அதற்காக பேரறிஞர்
அண்ணா வாலாஜாபாத்தில் இரண்டு நாடகங்களை நடத்தி வசூலான 3,500 ரூபாயையும்
வழங்கியுள்ளார். 1968-இல் அண்ணாநகரில் தன் தாயின் பெயரில் வள்ளிம்மாள் ஆரம்பப் பள்ளியைத்
தொடங்கினார். இப்போது அக்கல்வி நிறுவனம் ‘வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி’யாக
வளர்ச்சியடைந்துள்ளது.
‘தமிழ்க்கலை’ இதழை நடத்தினார். ‘பித்தன்’, ‘சித்தாந்தம்’, ‘கூட்டுறவு’, ‘பாரததேவி’
ஆகிய இதழ்களில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
சுதேசமித்திரன், அமுதசுரபி, தென்றல் மற்றும் இலண்டன், மலேயா, இலங்கை இதழ்களை
அ.மு.ப.வின் எழுத்துகள் அலங்கரித்தன. 1931-இல் ‘பாரதி வாழ்வு’ எனும் முதல் நூலை
எழுதத் தொடங்கிய இவர், கவிதை, உரைநடை, திறனாய்வு, நாடகம், அறிவியல், சமூகவியல்,
மானுடவியல், பயணம், தன்வரலாறு, பாடநூல், கல்வியியல் துறை சார்ந்த (5 ஆங்கில நூல்கள்
உட்பட) 84 நூல்களை எழுதியுள்ளார்.
15.08.2001 – சுதந்திர தினத்தன்று அ.மு.ப. கால மானார். அவரது நூற்றாண்டு விழா
2012-இல் நடைபெற்றது. வழங்கிய கருத்துரைகள் நினைவாஞ்சலியாக அமைந்தன.