பூமணி

பூமணி

Profession எழுத்தாளர்

Biography

திருநெல்வேலி சங்கரன்கோவில் ஆண்டிப்பட்டியில் பூலித்துரை – தேனம்மாள் தம்பதியருக்கு
12.5.1947-இல் பிறந்தார். இயற்பெயர்: பூ.மாணிக்கவாசகம்.

இளையரசனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார்
கல்லூரியில் புகுமுக படிப்பையும், பி.எஸ்சி., பட்டத்தையும் பெற்றார்.

சென்னையிலுள்ள தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி
பணிநிறைவு பெற்றார்.

அத்தை மகளான செல்லம் இவரது வாழ்க்கைத் துணை. கவிதா என்றொரு மகள், சிபி, ராஜா என இரு
மகன்கள்.

பூமணி கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு காதல் கவிதை எழுதி ‘தீபம்’ இதழுக்கு
அனுப்பினார். அக்கவிதை ‘ஏனோ தெரியவில்லை’ எனும் பெயரில் வெளிவந்தது. இதுவே அவரது
முதல் படைப்பு. ‘எழுத்து’ இதழில் வெளிவந்த ‘அறுப்பு’ இவரது முதல் சிறுகதை. முதல்
புதினம் ‘பிறகு’ 1979-இல் வெளிவந்தது.

இதுவரை 52 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘நேமிக்கம்’ தவிர 51 சிறுகதைகளும் ‘அம்பாரம்’
எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளன.

‘பிறகு’ (1979), ‘வெக்கை’ (1982), ‘நைவேத்யம்’ (1985), ‘வாய்க்கால்’ (1995),
‘வரப்புகள்’ (1995) ஆகிய ஐந்தும் ‘பூமணியின் ஐந்து நாவல்கள்’ எனும் ஒரே தொகுப்பாக
வெளிவந்துள்ளது. ஆறாவது நாவலான ‘அஞ்ஞாடி’ 2012-இல் வெளி வந்தது. ‘ஏலேய்’ (2001)
இவரது கட்டுரை நூல். ‘போலந்து சிறுகதைகள்’ இவரது மொழிபெயர்ப்பு நூல்.

‘கருவேலம் பூக்கள்’ எனும் திரைப்படத்தை கதை, உரையாடல் எழுதி இயக்கியுள்ளார். ‘மணல்’,
‘அகல்’, ‘பிஞ்சுகள்’, ‘பேனாக்கள்’ ‘எழுத்து’, ‘கிராமத்துச் சலங்கை’ ஆகிய ஆறு
குறும்படங் களைத் தயாரித்துள்ளார்.

‘வெக்கை’ புதினம் இந்தி மொழியிலும், சிறு கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம், ஜெர்மனி
ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

கேரள தமிழ்ச் சங்கத்தினரால் ‘பெட்டை’ சிறந்த சிறுகதையாகவும், திருப்பூர் தமிழ்ச்சங்கத்
தினரால் ‘வரப்புகள்’ சிறந்த நாவலாகவும், பாரத ஸ்டேட் வங்கியினரால் ‘வாய்க்கால்’ சிறந்த
புதினமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

‘பிறகு’ புதினத்திற்கு ‘இலக்கியச் சிந்தனை’ விருதும், ‘நல்ல நாள்’ சிறுகதைத்
தொகுதிக்கு ‘அக்னி அட்ஷர’ விருதும், ‘அஞ்ஞாடி’ புதினத் திற்கு ‘கீதாஞ்சலி’, ‘கலைஞர்
பொற்கிழி’ விருதுகளும், 2014ஆம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருதும் பெற்றுள்ளார்.

மேலும், சிறந்த எழுத்தாளருக்கான ‘சாந்தோம்’ விருது (1990), சிறந்த எழுத்தாளருக்கான
‘அமுதன் அடிகள் அறக்கட்டளை’ விருது (2001) மற்றும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள்
‘விஷ்ணுபுரம்’ விருது (2011) ஆகியனவும் வழங்கப் பெற்றுள்ளார். இவரது ‘வெக்கை’ எனும்
புதினம் ‘அசுரன்’ எனும் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.