| Profession | அறிஞர் |
|---|
நெல்லை, புலியூர்க்குறிச்சி கிராமத்தில் வசித்த கந்தசாமி பிள்ளை -மகாலெட்சுமி
தம்பதியருக்கு 17.04.1922 அன்று பிறந்தார். இயற்பெயர் சொக்கலிங்கம்.
1938-இல் நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் இடைநிலை கல்வி
பயின்றபோது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்காக தனது கல்லூரிக் கல்வியைத் துறந்தார்.
அவர் படித்த வடுகச்சிமலை பள்ளியிலேயே ஆசிரியராக வேலை யில் சேர்ந்தார்.
நீலாம்பிகையார் மகள் சுந்தரம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று
மகன்கள், எட்டு மகள்கள் (ஒரு மகனும், ஐந்து மகள்களும் உள்ளனர்).
தமிழறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் நெல்லையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்
மேலாளராக அலுவலகத்தின் மாடியிலேயே தங்கியிருந்தார். பிறகு சென்னையில் குடும்பத்தோடு
வாடகைக்கு தனி வீடு எடுத்து வசிக்கலானார். கழகத்தில் பணியாற்றியதால் சென்னையிலுள்ள
பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் நட்பும் பழக்கமும் ஏற்பட்டது. தன் குடும்ப வழி
உறுப்பினரான மறைமலை அடிகளார் மற்றும் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகினார். கழகத்தில்
1946 முதல் 1954 வரை பணியாற்றினார்.
தனது பெயரை ‘புலியூர் கேசிகன்’ என வைத்துக் கொண்டார்..
அச்சுப்பிழை திருத்துவதில் வல்லவராக பல்வேறு பதிப்பகங்களில் பணியாற்றினார். முதல்
புத்தகம் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது பின்னர் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு
புத்தகங்களை எழுதத் தொடங்கினார். சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதினார். இதழ்களில்
தொடர்கள் எழுதினார். ‘நந்திவாக்கு’ எனும் ஜோதிட இதழின் கௌரவ ஆசிரியராகப்
பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது உரை நிகழ்த்தினார். தமிழ்
வளர்ச்சித் துறை வல்லுநர் குழு உறுப்பினர் ஆனார். இவரது பணியைப் பாராட்டி தென்னிந்திய
இரயில்வே முத்தமிழ் மன்றம் பேரா. க.ப.அறவாணன் தலைமையில் ‘உரைச் செம்மல்’ பட்டம் வழங்கிச்
சிறப்பித்தது.
பழந்தமிழ்ப் பாடல்கள், தனிப் பாடல்கள், திருவாசகம், கீதை எனப் பல நூல்களுக்கு உரை
எழுதியுள்ளார். ‘புலவரும் புரவலரும்’ என்பதே இவரது முதல் நூல். பாட நூல்கள்-2,
பக்தி-4, திறனாய்வு-2 ஜோதிடம்-4, எண்கணிதம்-2, தியானம்- 3, மனோதத்துவம்- 2, ஆன்மிகம்-
2, சங்க இலக்கியம்-7, நீதி-8, சிற்றிலக்கிய நூல்கள் – 4, இலக்கண நூல்கள் உட்பட மேலும்
ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
17.4.1992-இல் காலமானார்.