| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலியின் அருகிலுள்ள பரலிக்கோட்டையில் சுப்பிரமணிய பிள்ளை – முத்து லட்சுமி
அம்மாளுக்கு 18.09.1889 அன்று பிறந்தார். திண்ணைப் பள்ளியிலும், பின்னர் திருநெல்வேலி
இந்துக் கல்லூரியிலும் படித்தார். ஆங்கிலத்துடன் வடமொழியும், பிற் காலத்தில் தேவதாஸ்
காந்தியிடம் இந்தியும் கற்றார்.
வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியின் கணக்குப் பிள்ளையாகப் பணியாற்றினார். வ.உ.சி. கைது
செய்யப்பட்டபோது கோவையில் தங்கியிருந்து சிறையிலிருந்த வ.உ.சி.க்குப் பல உதவிகளைச்
செய்தார். 12.12.1912-இல் வ.உ.சி. விடுதலையானபோது சிறை வாசலில் அவரை வரவேற்ற ஒரே
மனிதர் நெல்லையப்பர். வ.உ.சி.யுடன் சென்னைக்குச் சென்று, சில மாதங்கள் சிந்தா
திரிப்பேட்டையில் அவரது வீட்டிலேயே வசித்தார். வறுமையின் காரணமாக வ.உ.சி. வழக்கறிஞர்
தொழில் செய்ய தூத்துக்குடிக்குச் சென்றுவிட நெல்லையப்பர் சென்னையிலேயே ‘லோகோபகாரி’
பத்திரிகையில் துணையாசிரியராகச் சேர்ந்தார். பாரதியாரின் பாடல்களை ‘லோகோபகாரி’
இதழில் வெளியிட்டார்.
நெல்லையப்பருக்கு பாரதியுடனான சந்திப்பு 1907-இல் வ.உ.சி.யின் வீட்டில்
நிகழ்ந்தது.1909-இல் புதுவையில் தங்கியிருந்த பாரதியைச் சந்தித்து, பாரதியின்
‘சூரியோதயம்’, ‘கர்மயோகி’ இதழ்களில் பணியாற்றினார்.
1917-இல் பாரதியின் ‘கண்ணன் பாட்டு’, ‘பாப்பா பாட்டு’, ‘முரசு’, ‘நாட்டுப்பாட்டு’
எனும் நூல்களை பதிப்பித்து பாரதியின் புகழ் பரவச் செய்ததில் இவருக்கு முக்கியப்
பங்குண்டு.
நெல்லையப்பரின் படைப்புகள் ‘இந்தியா’, ‘ஞானபாநு’ ‘பாலபாரதி’, ‘தேசபக்தன்’, ‘நவசக்தி’
ஆகிய இதழ்களில் வெளிவந்தன. ‘உய்யும் வழி’, ‘பாரதி வாழ்த்து’, ‘நெல்லைத் தென்றல்’
ஆகியவை நெல்லையப்பரின் கவிதை நூல்கள். ‘தமிழ்த் திருமண முறை’, ‘பூலோகத்து சப்த
அதிசயங்கள்’, ‘பகவான் அரவிந்தன் பத்தினிக்கு எழுதிய கடி தங்கள்’, ‘நளன்தூது’,
‘திருப்பள்ளியெழுச்சி’ முதலிய சிறுநூல்களையும் தொகுத்து வெளியிட்டார். மகாத்மா
காந்தியின் ‘இந்திய சுயராஜ்யம்’, பங்கிம் சந்திரரின் ‘ராதாராணி’, ‘ஜோடி மோதிரம்’,
டி.என்.கங்குலியின் ‘ஸ்வர்ணலதா’ ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பாரதியின் இறுதி வினாடிகளில் உடனிருந்தவர் பரலியார். பாரதியின் உடலைச் சுமந்த
நால்வருள் ஒருவர். தன் வாழ்நாள் முழுவதும் பாரதியின் நினைவைப் போற்றிய நெல்லைப்பர்,
திருவல்லிக்கேணியில் பாரதிக்கு நினைவு இல்லம் அமைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
பிரம்மச்சாரியாகவே இறுதிவரை வாழ்ந்த இவர் ‘பூங்கோதை’ என்ற வளர்ப்பு மகளுடன் குரோம்
பேட்டையில் வசித்தார். 1946-இல் வளர்ப்பு மகளுக்குத் திருமணம் செய்து வைத்து பேரக்
குழந்தைகளோடு வசித்தார். 1959-இல் முதல மைச்சர் காமராசர் சுதந்திரப் போராட்ட
தியாகிகளுக்காக வழங்கிய நிலத்தில் குடியிருந்தார். இறுதிக் காலத்தில் வறுமையால் வாடி
28.03.1971-இல் மறைந்தார். காமராசர், கக்கன், ம.பொ.சி., டி.கே.எஸ் போன்றோர் இறுதி
அஞ்சலி செலுத்தினர். குரோம்பேட்டையில் நிறுவப்பட்ட அவரது சிலையினை 28.03.1993இல்
குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.