பண்டிதர் க.அயோத்திதாசர்

பண்டிதர் க.அயோத்திதாசர்

Profession அறிஞர்

Biography

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்த கந்தசாமி தம்பதியருக்கு 20.05.1845 அன்று
பிறந்தார். இயற்பெயர் காத்தவராயன்.

இவரது தாத்தா கந்தப்பன், பல்வேறு ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்தார். இன்று நாம்
படிக்கும் திருக்குறள் பரிமேலழகர் உரை இவர் பாதுகாத்து வைத்திருந்தது தான்.

அயோத்திதாசர் தந்தையின் பணி காரணமாக அவர்தம் குடும்பத்தினர் நீலகிரிக்கு குடி
பெயர்ந்தனர்.

இவர், சென்னையில் வசித்த காலத்தில் பத்ர தேசிகானந்தர், அயோத்திதாச கவிராய பண்டிதர்
ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை மட்டுமின்றி சித்த மருத்துவம், தத்துவம்,
சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை யும் கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்தி தாசரின் பெயரையே தனது பெயராக மாற்றிக்
கொண்டார்.

இளம் வயதிலேயே தாம் பெற்ற கல்வி மற்றும் அனுபவங்களினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல்
மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது மெய்யி யலின் உள்ளீடாக
பகுத்தறிவே இடம்பெற்றி ருந்தது. மானுட விடுதலைக்கான ஒரு தத்துவப் பார்வை அவரிடம்
உருப்பெற்றிருந்தது.

குன்னூர் நீலகிரியில் வசித்த ஒரு தோடர் இனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில நாட்களில் இரங்கூனுக்குக் குடியேறினார். அங்கு அவர்களுக்கு ஓர் ஆண்
குழந்தை பிறந்து பிறகு இறந்துவிட்டது. இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் சிறிது
காலத்தில் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.

செங்கல்பட்டு இரட்டைமலை சீனிவாசன் சகோதரியான தனலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து
வைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்தனர். இரண்டாவது
திருமணத்திற்குப் பிறகு நீலகிரியில் தங்கி மருத்துவப் பணியாற்றினார்.

19.06.1907-இல் சென்னை இராயப்பேட்டை யிலிருந்து ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை புதன்
கிழமைதோறும் வெளியிட்டு வந்தார். ‘கௌதமா பிரஸ்’ஐத் தொடங்கி ‘திராவிடப் பாண்டியன்’
(1885) இதழையும் நடத்தினார்.

1890-இல் ‘திராவிட மகாஜன சபை’யைத் தொடங்கி, அதன் முதல் மாநாட்டை நீலகிரியில் (1891)
நடத்தினார். தாழ்த்தப்பட்டோர் இந்தியா வில் நடத்திய முதல் மாநாடு இதுதான். அம் மாநாட்டில்
ஆங்கிலேய அரசுக்கு 10 கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டன.

ஏறத்தாழ 25 நூல்கள், 30 தொடர்கட்டு ரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை
ஆகியவற்றை எழுதியுள்ளார். இவை தவிர கேள்வி – பதில்கள், சில நூறு கட்டுரைகளையும்
எழுதியுள்ளார். மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் தொடங்கிய திருக்குறள் உரையானது
55 அதிகாரங்களுடன் நின்றுவிட்டது. 69-ஆவது வயதில் 5.5.1914 அன்று காலமானார்.