தா.ஏ.ஞானமூர்த்தியார்

தா.ஏ.ஞானமூர்த்தியார்

Profession அறிஞர்

Biography

சென்னை மயிலாப்பூரில் ஏகாம்பரம் – இராசம்மாள் இணையருக்கு 13.8.1911-இல் பிறந்தார்.

1930-இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற இவர், குடும்ப வறுமை காரணமாக
செங்கற்பட்டு மாவட்டத் தலைமை காவற்பணிமனை, சென்னை உயர்நீதிமன்ற அதிகாரிகள் அறக்குழு
அலுவலகம், கல்வி வெளியீட்டுக் கழகம், மயிலை நிரந்தர நிதி நிறுவனம் என்பன போன்ற
நிறுவனங்களில் பல்வேறு காலங்களில் எழுத்தராகப் பணியாற்றினார்.

பின்னர் அஞ்சல் தணிக்கை அலுவலகப் பணியில் சேர்ந்தார். அங்கு பொறியாளரும், தமிழ்
அறிஞருமான பா.வே.மாணிக்க நாயக்கர் நட்பு கிடைத்து, அவரது குடும்பத்தில் ஒருவர் போல்
ஆனார்.

பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியில் பணியாற்றிய இலட்சுமணசாமி எனும் பெருஞ்செல்வந்தர் சென்னை,
சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். அவரது மகள் மரகதம் அம்மையாரை 09.09.1937-இல்
திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண் குழந்தைகள்.

தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் தொடர்பு ஏற்பட்டு, நன்கு தமிழ்ப் பயின்று,
1942-இல் வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மற்ற மாணவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக
நண்பர்கள் சிலருடன் இணைந்து 1932-இல் ஆழ்வார்பேட்டை பா.வே.மா. மாளிகையில் ‘கலைப்பணி
பயிற்சிக் கழகம்’ தொடங்கினார். அக்கழகம் 1947 வரை சிறப்பாகச் செயற்பட்டது.

1946-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டம் பெற்று, அப்போதுதான் தொடங்கப்பட்ட
கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியின் முதல் தமிழ்த் துறைத் தலைவராக பணியேற்றார்.
1950-இல் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். ஜி.ஆர்.தாமோதரன் தொடங்கிய ‘கலைக்கதிர்’
திங்களிதழில் உதவியாசிரியராகப் பொறுப்பேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ மேற்பார்வையில், ஆய்வு மேற்கொண்டு கோவை
மாவட்டத்திலேயே முதன்முதலாக ‘டாக்டர்’ பட்டம் பெற்றார். பல்வேறு அமைப்புகள் பாராட்டு
விழாக்கள் நடத்தின. இவரை ‘டாக்டர் அய்யா’ என அழைத்தனர்.

பூ.சா.கோ கல்லூரியில் 1967-இல் தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளைத்
தோற்றுவித்து, தமிழ் முதுகலைப் பேராசிரியராகவும், ஆராய்ச்சிப் பேராசிரியராகவும்
பணியேற்றார். பின்னர் இவரால் அக்கல்லூரியில் பிஎச்.டி., எம்.லிட் பட்டங்களும்
தோற்றுவிக்கப்பட்டன.

சில நாடகங்களை உருவாக்கி நடித்துள்ள இவர், ‘கோவை நாடகக் கலைக் கழக’த்தைத் தொடங்கினார்.
இந்நாடகக் கழகத்தில் பயிற்சி பெற்றவர்களுள் முக்கியமானவர் நடிகர் நாகேஷ்.

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தா.ஏ.ஞா 23.02.1993இல்
இயற்கை எய்தினார்.