தாயம்மாள் அறவாணன்

தாயம்மாள் அறவாணன்

Profession அறிஞர்

Biography

குமரி சேத்தன் புதூரில் 23.05.1944 அன்று பிறந்தார். தந்தை தமிழாசிரியர் பகவதிப்
பெருமாள். தாயார் கோமதி.

ஐந்தாம் வகுப்பு வரை மயிலாடி அரசு ஆரம்பப் பள்ளியிலும், பின் எட்டாம் வகுப்பு வரை
ரிங்கல்டோபி பள்ளியிலும், எஸ்.எம்.எம்.பள்ளியில் மேல்நிலை பயின்றார். எம்.ஏ., பிஎச்.டி.,
பட்டங்களைப் பெற்றார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன்
துணைவியார். 21.04.1969-இல் திருமணம். ‘அறிவாளன்’ என்றொரு மகன், ‘அருள்செங்கோர்’
என்றொரு மகள்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக முன்னைத் தமிழியல் துறைத் தலைவர்.

1970- 98 இல் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் முப்பது ஆண்டுகள் விரிவுரையாளர் பணி,
1999 முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி, ஆப்பிரிக்கா செனகால் நாட்டு தக்கார் பல்கலைக்
கழகத்தில் மூன்று ஆண்டுகள் மாணவர்க்குத் தமிழ் பயிற்றிய பணி என முப்பத்து மூன்று ஆண்டுகள்
ஆசிரியப் பணி அனுபவமுள்ளவர்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பன்முறை பயணித்தவர். ‘திராவிட –
ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதிய மைக்காகத் தமிழக அரசின் முதற் பரிசைப் பெற்றவர்.
‘குழந்தை: ஓர் இலக்கியப் பகுப்பாய்வு’ என்ற நூலுக்காக, நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவன
வள்ளல் பாண்டித்துரைத் தேவர் மங்கல விழா நினைவுப் பரிசையும் பெற்றவர்.

‘உறவுமுறைகள்’, ‘பல்லாங்குழி’, ‘பெண்மொழி’, ‘புதிய கோலங்கள்’, ‘பெண்ணறிவு’, ‘நூல்
பல கல்’, ‘தமிழ்ப்பெண்’, ‘அவ்வையார்’, ‘பெண்புலவர் களஞ்சியம்’ என்பன உள்ளிட்ட
முப்பத்துமூன்று நூல்களை எழுதியவர்.

திருவாவடுதுறை ஆதினம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழப்பா கல்வி அறக்கட்டளையும் இணைந்து
வழங்கிய ‘ஔவை விருது’, 2003-இல் வழங்கிய வாரியார் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

இவரது சில நூல்கள், தமிழக அரசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழா சிரியர் மன்றம் ஆகியவற்றின் விருதுகளைப்
பெற்றுள்ளன.

புதுவைப் பல்கலைக் கழக இளங்கலை பாடத் திட்ட உருவாக்கமும், நூலாக்கமும் செய்து உதவியவர்.
1986- இல் புதுவைப் பல்கலைக் கழகப் புத்தொளிப் பயிற்சி இயக்குநராக செயலாற்றியவர்.
1975-77இல் ‘கொங்கு’ எனும் வரலாறு அறிவியல் மாத இதழை நடத்தியவர். பல்வேறு பல்கலைக்
கழகங்கள், கல்லூரிகளில் அறக் கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். 1982 முதல்
‘தமிழ்க்கோட்டம்’ வழியாக 80க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட் டுள்ளார்.