தமிழ்வாணன்

தமிழ்வாணன்

Profession பத்திரிக்கையாளர்

Biography

எழுத்தாளரும், ‘கல்கண்டு’ இதழாசிரியருமான தமிழ்வாணன், தற்போது சிவகங்கை
தேவக்கோட்டையில் லெட்சுமணன் -பிச்சையம்மை தம்பதியருக்கு 05.05.1926 அன்று பிறந்தார்.
இயற்பெயர் இராமநாதன். பின்னாளில் இவருக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரை ‘தமிழ்த் தென்றல்’
திரு.வி.க. சூட்டினார்.

தனது பத்திரிகையுலக வாழ்க்கையை ‘கிராம ஊழியன்’ இதழில் உதவி ஆசிரியராகத்
தொடங்கினார். பின்னர் அவ்விதழின் ஆசிரியர் ஆனார். பின்னர், ‘அணில்’ இதழின் ஆசிரியராகப்
பொறுப்பேற்று அவ்விதழில் ‘துணிவே துணை’ எனும் ஒரு சொற்றொடரை தனது பொன்மொழியாக
அறிமுகப்படுத்தினார்.

வகுப்புத் தோழர் திருநாவுக்கரசு (பின்னாளில் வானதி பதிப்பகம் தொடங்கியவர்) -வுடன்
இணைந்து ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கி குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டார். இவருடைய
எழுத்துகளுக்கு தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்த ‘குமுதம்’ இதழின்
நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ் வாணனை ஆசிரியராகக் கொண்டு ‘கல்கண்டு’ வார இதழைத்
தொடங்கினார்.

அவ்விதழின் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணன் ஏற்று நடத்தினார். அவரது அயராத உழைப்பில்
அதிகமாக விற்பனை ஆகும் வார இதழ் எனும் சாதனையை ‘கல்கண்டு’ பெற்றது.

‘கல்கண்டு’ இதழில் தமிழ்வாணன் எழுதிய கேள்வி – பதில் பகுதிக்கு அமோக வரவேற்பு
கிடைத்தது. கோணி மூட்டையில் வரும் குவியல் குவியலான வாசகர்களின் கேள்விகளுக்குச்
சூடாகவும் சுவையாகவும், மிக வேகமாகவும் பதில் எழுதினார்.

புலித்தேவன், கருநாகம், கருகிய கடிதம், ஆயிரம் கண்கள், மீனழகி, நடுவிரல், காலடி ஓசை,
இரும்புக்கை மனிதன், ஒற்றைச் செருப்பு உட்பட 52 மர்ம நாவல்களை எழுதினார். தனது நூல்களை
வெளியிடுவதற்காக தனது மனைவியின் பெயரில் ‘மணிமேகலை பிரசுரம்’ எனும் நூல் வெளியீட்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.

‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என அறியப்படும் தமிழ்வாணன், உண்மைக் கதைகள், சிறுகதைகள்,
உடல்நலம், பெண்களுக்கானவை, குடும்பம் தொடர்பானவை, தன்னம்பிக்கை என 100-க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ளார்.

இவர் உருவாக்கிய ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் வாசகர் மனங்களில் உயிரோடு இருக்கும்
ஒரு நிஜ துப்பறிவாளனாகவே நிலைத்துள்ளது.

‘சங்கர்லால்’ குல்லாவும், கருப்புக் கண்ணாடி யுமாக தமிழ்வாணன் காட்சியளித்தார். ‘காதலிக்க
வாங்க’ என்றொரு திரைப்படத்தை கதை வசனம் எழுதி தயாரித்தார்.

1977 நவம்பர் 10ஆம் நாள் தனது 51-ஆவது வயதில் காலமானார். இரவி தமிழ்வாணன், லேனா
தமிழ்வாணன் ஆகிய இரு மகன்களும் தந்தை விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து
வருகின்றனர்.