தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்

தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்

Profession அறிஞர்

Biography

மதுரைஅருகிலுள்ள விளாச்சேரி எனும் ஊரில், கோவிந்த சாஸ்திரி – இலட்சுமி தம்பதியருக்கு
06.07.1870 அன்று பிறந்தார். இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி.

உயர்கல்வியை பசுமலையில் பயின்ற இவர், மதுரைக் கல்லூரியில் எப்.ஏ. முடித்து, பின்னர்
இப்போது கிறித்துவக் கல்லூரி என அழைக்கப்படும் மில்லர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
மகாவித்வான் சு.சபாபதியிடம் முறையாக தமிழ் பயின்று, 20 வயதுக்குள் தமிழில் ஆழ்ந்த
அறிவு பெற்றார்.

1893-இல் மில்லர் கல்லூரியிலேயே தமிழாசிரியர் ஆனார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்
தமிழ்ப் பேராசிரிய ராகப் பணியாற்றிய ஜி.யூ.போப் ஓய்வு பெற்றபோது, தமக்குப் பின்
அப்பதவியை ஏற்கத் தகுதியானவர் சாஸ்தியாரே என உணர்ந்து, சென்னை கவர்னர் மூலம் அழைப்பு
விடுத்தார். சாஸ்திரியாரோ தனது உடல் நல மின்மை காரணமாக வெளிநாடு செல்ல மறுத்து
விட்டார்.

சாஸ்திரியாருக்கு 19-ஆம் வயதில் பழநியில் முத்து சுபலட்சுமியுடன் திருமணம் நடந்தது.
இத் தம்பதியருக்கு ஆனந்தவள்ளி என்றொரு மகள்; நடராஜன், சுவாமிநாதன் என இரு மகன்கள்.

சாஸ்திரியார் பிறமொழி இலக்கிய வகைமை களும் புதிய கருத்துகளும் தமிழில் வரவேண்டும்
என்று விரும்பினார். 1897-இல் தனிப்பாசுரங்கள் எழுதி, தான் கூட்டாசிரியராக இருந்த
‘ஞான போதினி’ இதழில் வெளியிட்டார். அப்போது தனது பெயரைத் தமிழாக்கி ‘பரிதிமாற்
கலைஞர்’ என்ற பெயரில் எழுதினார்.

சாஸ்திரியாரின் நூல்களுள் நமக்குக் கிடைத்துள்ளவை 12 மட்டுமே. அவற்றுள் ‘ரூபாவதி அல்லது
காணாமற்போன மகள்’, ‘கலாவதி’, ‘மானவிஜயம்’, ‘தனிப்பாசுரத் தொகை’, ‘பாவலர் விருந்து
முதல் நாள்’, ‘நாடகவியல்’, ‘மதிவாணன்’, ‘தமிழ் மொழியின் வரலாறு’, ‘ஸ்ரீமணிய சிவனார்
சரித்திரம்’, ‘சித்திரகவி விளக்கம்’ ‘தமிழ் வியாசங்கள்’. நமக்குக் கிடைக்கப் பெறாத
நூல்கள்: ‘குணவதி’, ‘சீதாபகரணம்’, ‘பார்வதீபரி யணம்’, ‘உமை திருமணம்’, ‘அவ்வைக்
காட்சி, ‘சூர்ப்பணகை’, ‘முத்திராராட்சசம், ‘இன்னுமா?’, ‘இழிசனர் வழக்குரை வரையறை’ ,
‘வித்தியா விருத்தி’ ஆகியன.

கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, மழவை மகாலிங்கய்யர் இலக்கணம், பஞ்சதந்திரம், திருக்குடந்தை
வடிவேலன் பிள்ளைத் தமிழ், மதுரை மாலை ஆகிய பண்டைத் தமிழ் நூல் களைப் பதிப்பித்தார்.
மேலும், தாமும் தமது நண்பர்கள், மாணவர்கள் இயற்றிய நூல்களையும் பதிப்பித்தார்.

ஈழத்தில் பல நாட்கள் தங்கிச் சொற்பொழி வுகள் நிகழ்த்தினார். எலும்புருக்கி நோயால்
பாதிக்கப்பட்டிருந்த சாஸ்திரியார் 2.11.1903 அன்று இயற்கை எய்தினார்.