தமிழறிஞர் நா.நளினிதேவி

தமிழறிஞர் நா.நளினிதேவி

Profession அறிஞர்

Biography

மதுரையில் ச.நாகரத்தினம் -சுப்புலட்சுமி இணையருக்கு 26.6.1945 அன்று பிறந்தார்.

தந்தை பணியாற்றிய நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் மதுரை பள்ளிகளில் பள்ளிப் படிப்பை
நிறைவு செய்து, மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் முதுகலை பட்டப்
படிப்பு வரை பயின்றார். மதுரைப் பல்கலைக்கழக முதல் முதுகலைப் பட்டதாரிகளுள் ஒருவர்.

1969-இல் மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியில்
சேர்ந்தார். பின்னர் சேலம், திருப்பூர், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிகளில் பணியாற்றி
2004-இல் பணி நிறைவு பெற்றார்.

இவரது பேராசிரியர் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்காக பெரிதும் பணியாற்றினார்.
சமுதாய நோய் தீர்க்கும் வழிகளைப் பல கட்டுரைகளில் புலப்படுத்தி உள்ளார்.

1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், பாத்திமா கல்லூரி மாணவியான இவர்
(அது ஆங்கிலேயருடைய கல்லூரி என்றபோதிலும்) அஞ்சாது அப்போராட்டத்தில் கலந்துகொண்டார்.
1980-களில் நடைபெற்ற இலங்கை எதிர்ப்புப் போராட்டத்திலும் வெகு முனைப்புடன்
கலந்துகொண்டார். பின்னர் ஊதிய இழப்பு, இடைநீக்கம் பற்றி கவலைப் படாது முதன்முதலாக
ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகி சிறை சென்ற
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவர்.

கோயிலுக்குச் செல்வதையும் சமயச் சடங்கு களையும் அறவே விடுத்துள்ள இவரின் திருமணம்
சடங்குகள் இன்றியே நடைபெற்றது.

மொழியியல், இதழியல் ஆகியவற்றில் பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவரது எழுத்துகள் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம் பற்றி நிறைய பேசுகின்றன. ‘ஆனந்த
விகடன்’, ‘தாமரை’, ‘பெண்ணே நீ’, ‘புதிய பெண்ணியம்’ போன்ற இதழ்களில் எழுதினார்.
1987-இல் ‘ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் சமுதாய மாற்றம்’ எனும் பொருளில் ஆய்வு செய்து
முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வு இவரது முதல் நூலாக 1991-இல் தமிழ் வளர்ச்சித் துறை
நிதியுதவியுடன் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. அதன் பிறகு
‘சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்’, ‘தமிழ் இலக்கியம் மரபும் பழமையும்’,
‘படைப்பிலக்கியப் பார்வையில் தமிழ் இலக்கிய வரலாறு’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

புதுக்கோட்டையில் 22 ஆண்டுக் காலம் கல்லூரியில் இவர் ஆற்றிய தமிழ்ப் பணிக்காக புதுக்கோட்டை
தமிழ் இலக்கியப் பேரவை ‘தமிழ்த் தென்றல்’ விருதளித்துச் சிறப்பித்துள்ளது.