| Profession | அறிஞர் |
|---|
தஞ்சைமாவட்டம், திருச்செங்காட்டங்குடியில், முத்தையா தேசிகர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு
26.08.1908 அன்று பிறந்தார்.
தந்தையாரிடம் தேவாரம், திருவாசகம், முதலியவற்றை பண் முறையோடு கற்றார். திருமருகல்
‘செட்டிப் பெண் திருவிழா’வுக்கு தன் தந்தையாருடன் கச்சேரிக்குச் சென்ற சிறுவன்
தண்டபாணிக்கு அங்கு பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரது இனிமையான பாடலைக் கேட்டு
வைரவன் செட்டியார் ஐந்து ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். இதுதான் இவரது முதல் கச்சேரி.
முதல் வருமானம் ஐந்து ரூபாய்.
திருமருகல் நாதஸ்வர வித்வான் சடையப்பப் பிள்ளையிடம் சரளி, ஜண்டை, கீதம், வர்ணம் கற்றார்.
மன்னார்குடி ராஜூ முதலியாரின் தேவாரப் பாடசாலையில் மூன்றாண்டுகள் பயின்றார். கும்பகோணம்
பிடில் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் நான்காண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார். தேசிகரின் முதல்
இசைக் கச்சேரி, மதுரை சித்திரை வீதியிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்பாள் உற்சவத்தில்
நிகழ்ந்தது.
ஒக்கூர் சி.கரு.சி.லெட்சுமணன் செட்டியாரின் மதுரை தேவாரப் பாடசாலையில் ஆசிரியராகப்
பணியேற்றார்.
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் உற்சவம், சென்னை மயிலை பங்குனி உத்திர விழா, கும்பகோணம்
மாசிமக விழா, நாகை ஆடிப்பூர விழாக்களிலும் அவ்வாறே திருநெல்வேலி, தூத்துக்குடி,
சங்கரன்கோயில், திருவாரூர் பங்குளினி விழாவிலும், கண்டனூர், புதுவயல், தேவகோட்டை
முதலிய செட்டிநாடு ஊர் விழாக்களிலும், காளையாகோவில் விசாக விழாவிலும் தேசிகரின்
திருமுறை முழக்கம் சிறப்புற்று விளங்கியது.
தேசிகர் திருநெல்வேலி ‘ஞானம்மா’வைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஓர் ஆண் குழந்தை
பிறந்து மறைந்தது. இரண்டாவது மனைவியாக ‘தேவசேனா’வைத் திருமணம் செய்து கொண்டார். இவர்
பாடத் தெரிந்தவர். இவருடன் சில திரைப்படங்களில் நடித்தார்.
1939-இல் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழக இசை நிகழ்ச்சியில் ராஜா முத்தையா செட்டியார்
இவருக்கு ‘இசையரசு’ பட்டத்தை வழங்கினார். ‘தேவாரமணி’, ‘சங்கீத சாஹித்ய சிரான்மணி’,
‘சங்கீதகலா சிரோன்மணி’, ‘இசைப்பேரறிஞர்’ உட்பட 14 பட்டங்களைப் பெற்றார்.
1948-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப்பிரிவு உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
1955-இல் இசைக் கல்லூரியின் தலைவராகப் பொறுப்பேற்று சுமார் 16 ஆண்டுகள் பணியாற்றினார்.
18 இசைக் கட்டுரைகளை எழுதினார்.
பட்டினத்தார், வள்ளாள மகாராஜா, தாயு மானவர், மாணிக்கவாசகர், நந்தனார், திருமழிசை
ஆழ்வார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். முதல் தேதி, திருமணம் ஆகிய திரைப்படங்களில்
பின்னணி பாடினார்.
தேசிகர் 29.06.1973 அன்று இயற்கை எய்தினார்.