| Profession | பேராசிரியர் |
|---|
இயற்பெயர் திருவேங்கடம். திருப்பத்தூர் வேலம் கிராமத்தில் முனிசாமி – அம்மாக்கண்ணு
இணையருக்கு 25.4.1912 அன்று பிறந்தார்.
வேலம், வாலாசா, திருப்பத்தூர் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து, 1928-இல்
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி ஏற்றார். 1935-இல் தமிழ் வித்துவான்
தேர்வைத் தனியாகப் படித்து மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
1935-இல் மாமன் மகள் இராதா அம்மையாரை மணந்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகள்.
1939-இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறையில்
பணியாற்றத் தொடங்கினார். 1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரானார்.
1948-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்னும் தலைப்பில் ஆய்வு
செய்து, சென்னை பல்கலைக் கழகத்தின் ‘முதல் டாக்டர் பட்ட’த்தைப் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றி, 1961-இல் தமிழ்த்
துறைத் தலைவரானார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய
பன்மொழியில் புலமை பெற்றிருந்தார். 1971-இல் மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தரானார்.
உடல்நிலை சரியில்லாமல் 62-ஆவது வயதில் 10.10.1974-இல் காலமானார்.
1939-இல் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் போது ‘குழந்தைப் பாடல்கள்’ எனும் முதல்
நூலை எழுதினார். கழகம் வெளியிட்டது. மேலும் 3 நூல்கள் ‘கழகம்’ வெளியீடாகவே
வெளிவந்தன. மு.வ.வின் பெயருடன் கழக வெளியீடாக வெளிவந்த முதல் நூல் ‘கண்ணுடைய
வாழ்வு’. பின்னர் கழகச் சிறுகதைகள், கழகத் தமிழ் இலக்கணம் ஆகியவை வெளிவந்தன.
‘செந்தாமரை’ (1946) இவரது முதல் புதினம்.
14 புதினங்கள், 3 சிறுகதை தொகுதிகள், 4 நாடகங்கள், 5 கடித இலக்கியங்கள், 1 பயணம், 4
வாழ்க்கை வரலாற்று, 3 திறனாய்வு, 21 இலக்கிய ஆய்வு, 1 உரைநடை, 1 இலக்கிய வரலாற்று,
11 சிந்தனைக் கட்டுரைத் தொகுதிகள், 6 மொழியியல், 1 முன்னுரை தொகுதி, 1. மணிமொழிகள்
உட்பட 91 நூல்கள் வெளிவந்துள்ளன.
‘அகல்விளக்கு’ புதினத்துக்கு ‘சாகித்ய அகா தெமி’ விருது, ‘கள்ளோ காவியமோ’,
‘அரசியல் அலைகள்’, ‘மொழியியல்’ ஆகிய 3 நூல்களுக்கு தமிழக அரசு விருதுகள்,
‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’, ‘மொழிநூல்’, கள்ளோ காவியமோ’, ‘அரசியல்
அலைகள்’, ‘விடு தலையா’, ‘ஓவச்செய்தி’ ஆகிய 6 நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்
பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார். இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்யன்,
சிங்களம், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளி வந்துள்ளன.