டாக்டர் சொ.சிங்காரவேலனார்

டாக்டர் சொ.சிங்காரவேலனார்

Profession பேராசிரியர்

Biography

மயிலாடுதுறை திருச்சிற்றம்பலத்தில் வசித்த சொக்கலிங்க தேசிகரின் மகனாவார்.

இவர் தருமபுரத்தில் முறையாகத் தமிழ்க் கற்று வித்துவான் பட்டத்தைப் பெற்றவர். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் ‘மொழியியல் அணுகு முறையில் அப்பர் தேவாரம்’ என்ற தலைப்பில் ஆய்வு
செய்து ஆங்கிலத்தில் ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

தாம் பயின்ற தருமபுரம் ஆதீனத்தின் தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியில்
சேர்ந்து, பணி உயர்வு பெற்று முதல்வராக 11 ஆண்டுகள் பணியாற்றினார். அ.வ.அ. கல்லூரியில்
தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த வடிவுக்கரசியை மணந்தார். இவர்களுக்கு
குழந்தைப்பேறு இல்லை. இத் தம்பதியர் மயிலாடுதுறையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
அவ்வீட்டின் முன்புறத்தில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்து தினம் ஒரு தகவலாகத் திருமுறைத்
தொடர்களோ, இறைச் சிந்தனைத் தொடர்களோ ஆறு, ஏழு வரிகளில் கைப்பட எழுதி வைப்பார்கள்.

1958-இல் தொடங்கி ஆதீனங்களில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். ஆதீன ஆண்டு மலர்களில் ஆய்வுக்
கட்டுரைகளை எழுதினார். ஈழம் சென்று திருவாசக விழாக்களில் கலந்து கொண்டார். 1979-இல்
நடைபெற்ற அகில இலங்கைச் சைவர் மாநாட்டுத் தலைவராக சமயச் சொற்பொழிவு ஆற்றினார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் முனைவர் (பக்தி இலக்கியம்) ஆய்வாளராக இவரைப்
பயன்படுத்திக் கொண்டது. தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் முதுமுனைவர் (டி.லிட்) பட்டத்திற்கான,
பக்தி இலக்கிய ஆய்வாளர், ஓர் அறிஞருக்குரிய கண்காணிப்புப் பேராசிரியராக
நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய வானொலியின் திருச்சி, நெல்லை, பாண்டிச்சேரி பட்டக்
கண்காணிப்புப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுவர்
முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாக விளங் கினார். சிங்கப்பூர், மலேசியா சென்று 22
இலக்கிய சமயப் பேருரைகள் நிகழ்த்தியுள்ளார்.

ஆராய்ச்சி, உரை, வரலாறு, கவிதை, கட்டுரை, நாடகம் என இவரது 34 நூல்கள்
வெளிவந்துள்ளன. இவற்றுள் ‘திருஞானசம்பந்தர் வரலாற்றா ராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்’,
‘அப்பர் தேவாரத்திறன்’, ‘வள்ளலார் வாழ்வியல்’ , ‘புதுமைக்கு’ முதலான நூல்கள் குறிப்பிடத்
தக்கன. இவரது ‘ஊமைக் குயில்’, ‘வெள்ளிவீதி’ எனும் நாடகங்கள் கல்லூரிகளில் நாடகங்களாகப்
பயிலப் பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளன. 1953-1992இல் 400 திறனாய்வுக் கட்டுரை களை
எழுதியுள்ளார். இவர் பல பட்டங்களைப் பெற்றபோதிலும் ‘செஞ்சொற் கொண்டல்’ என்ற பட்டமே மக்கள்
நாவில் நிலைத்துள்ளது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.