| Profession | அறிஞர் |
|---|
இராமநாதபுரம் சித்தார்கோட்டையில் மல்லாரி அப்துல்கனி மரைக்காயர் -உம்மு ஹபீமா
தம்பதியருக்கு 20.01.1947-இல் பிறந்தார். புனைப்பெயர் ஹிமானா சையத்.
இவரது துணைவியார் ஹிமானாபர். இவர்களுக்கு அப்துல்கனி, மீம்அஸ்மி, வாஸிம் கான் என மூன்று
குழந்தைகள்.
பள்ளிக் கல்வியைத் தேவக்கோட்டை தே பிரித்தோ பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை லயோலா
கல்லூரியிலும், மருத்துவக் கல்வியை (எம்.பி.பி.எஸ்) மதுரை மருத்துவக் கல்லூரியிலும்
பயின்றார். குடும்ப மருத்துவராகவும், பகுதிநேரப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.
1963-இல் இவரது முதல் கவிதை ‘மறுமலர்ச்சி’ சிங்கப்பூர் தமிழ் முரசு இதழில்
வெளியானது. அதன்பின் தமிழ்நேசன் (மலேசியா) இதழிலும் எழுதத்தொடங்கினார். 1967-இல்
மலர்மதி மாத இதழில் இவரது முதல் கதை வெளியானது. திருச்சியிலிருந்து வெளிவந்த
‘நர்கிஸ்’ மாத இதழின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் ‘விடிவெள்ளி’ உள்ளிட்ட சில இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாயின.
பன்னாட்டு சிறப்பு மலர்கள் பலவற்றில் கட்டு ரைகள் வழங்கியுள்ளார். பல இணையதளங்களில் இவரது
படைப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. ஆங்கில இதழ்களில் ஆங்கிலத்தில் கதைகள் எழுதியுள்ளார்.
இப்படி யாக இதுவரை 750 சிறுகதைகள், 10 புதினங்கள், சில ஆயிரம் கட்டுரைகள்,
700-க்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியுள்ளார். இவை 12 சிறுகதைத் தொகுதிகள், 8
நாவல்கள், 4 மருத்துவ நூல்கள் உட்பட 41 நூல்கள் வெளிவந்துள்ளன.
இவரது ‘ருசி’ சிறுகதைத் தொகுதி 1994-99இல் கேரள பல்கலைக் கழக முதுகலைப் பாடத்
திட்டத்திலும், ‘கோடுகள் கோலங்கள்’ புதினம் 2004-06இல் கேரள மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம்
வகுப்புப் பாடத்திட்டத்திலும், ‘ஆணிவேர்’ சிறுகதை இலங்கையில் 8-ஆம் வகுப்பு
பாடநூலிலும், நடப்பு கல்வியாண்டில் ‘புரட்சிப் பூக்கள்’ எனும் புதினம் புதுக்கோட்டை அரசு
மகளிர் கல்லூரியில் பாடநூலாகவும் இடம்பெற்றுள்ளன.
இவரது படைப்புகளை ஆய்வு செய்து சென்னை, மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன் ஆகிய
பல்கலைக்கழகங்களில் இதுவரை 5 ஆய்வு மாணவர்கள் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். ஐவர் ஆய்வு
செய்து கொண்டிருக்கின்றனர். ‘ஹிமானா சையத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில்,
பாரதிதாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஆலிஸ் ஓர் சிறு நூலை எழுதியுள்ளார்.
சையத் இப்ராகிம் சர்வதேச இலக்கிய மாநாடுகள் பலவற்றில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா, புருணை தாருஸ்ஸலாம், தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம்,
இலங்கை, குவைத், சவூதி அரேபியா, இந்தோனேசியா போன்ற நாடு களுக்கு அழைப்பின்பேரில்
பயணம் செய்து இலக்கிய களப் பணியாற்றினார்.
தமிழ்மாமணி, பாரதஜோதி, சிறந்த குடிமகன் போன்ற விருதுகளைப் பெற்ற இவர் 21.2.2022
அன்று சென்னையில் காலமானார்.