| Profession | எழுத்தாளர் |
|---|
செங்கல்பட்டில் வேம்புசாமி – ஜெயலட்சுமி தம்பதியருக்கு 04.01.1954 அன்று பிறந்தார்.
இயற்பெயர்: சங்கரன். தந்தை பத்திரிகையாளர்.
செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் இவரைப் பேச்சு,
எழுத்து, நடிப்பு துறைகளில் ஈடுபடுத் தியது. தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில்
படித்தபோது தமிழ்ப் பேரவை செயலரானார். ‘வம்பன்’ என்றொரு கையெழுத்து இதழை நடத்தினார்.
12-வது வயதில் நாடகத்திலும் பங்கேற்றார். முதல் நாடகத்தில் நடித்த பாத்திரம் நிருபர்.
ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பின்
விளம்பரக் கணக்குப் பிரிவில் பணியாற்றினார். 1974-இல் ‘இதழியல்’ பட்டயம் முடித்து,
1975-இல் அதே இந்தியன் எக்ஸ்பிரஸில் நிருபரானார். விகடன், கல்கி, தினமணி கதிர்,
கணையாழி, விசிட்டர், அமுத சுரபி ஆகிய இதழ்களில் எழுதினார். தொழிற் சங்க முயற்சிகளில்
ஈடுபட்டதால் நிர்வாகம் இவரை வேலையிலிருந்து நீக்கியது. அதை எதிர்த்து வழக்கு
தொடுத்தார். ‘இண்டியன் சன்’, ‘அஸ்வினி’, ‘எதிரொலி’ என சில இதழ்களில் பணியாற்றிக்கொண்டே
எழுதிக் கொண்டுமிருந்தார். 1982-இல் ‘தீம்தரிகிட’ இதழைத் தொடங்கினார். 1976-77இல்
‘கூத்துப்பட்டறை’யில் ஈடுபட்டார். 1978-இல் வீதி நாடக இயக்கத்தை உருவாக்கியவர்களில்
இவரும் ஒருவர். நண்பர்களுடன் இணைந்து ‘பரீக்ஷா’ நாடகக் குழுவைத் தொடங்கினார்.
1978-லும், 1985-லும் ‘சென்னை நிருபர்கள் சங்க’த்தின் செயலாளராக இரு முறை பொறுப்பில்
இருந்து, 1983-இல் ‘ஜூனியர் விகடன்’ தொடங்கியதும் அதில் எழுத ஆரம்பித்தார். பிறகு
வாரக்கூலி அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இவரது தாய் 56-வது வயதில் இறந்தார். அவர் இறந்து 24-வது நாள், இவரும் பத்திரிகையாளர்
பத்மாவும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அதாவது, பரீக்ஷா நாடக நிகழ்ச்சி
ஒன்றில் மேடையில் இருவரும் “கணவன் மனைவியாக வாழப்போகிறோம்” என அறிவித்து மாலை
மாற்றிக் கொண்டனர்.
1984 மார்ச்சில், இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிரான வழக்கில், இவரை வேலையிலிருந்து
நீக்கியது தவறு என தீர்ப்பு வந்தது. பணி இழப்புக் காலத்துக்கான ஊதியத் தொகையில் கடன்கள்
போக எஞ்சியதைக் கொண்டு மீண்டும் ‘தீம்தரிகிட’ இதழைத் தொடங்கினார். 30,000 பிரதிகள்
விற்றும் முகவர்கள் ஏமாற்றியதால் ஏழு இதழ்களுடன் மீண்டும் இதழ் நின்றது.
பதினாறு கட்டுரை நூல்கள், ஐந்து நாடக நூல்கள், ஒரு புதினம், ஒரு திரைக்கதை வசனம்,
ஒரு பயண நூல், ஒரு இயக்கிய நாடக நூல் ஆகியன இவரது நூல்கள். பத்திரிகை, நாடகம்,
தொலைக்காட்சி, மீடியா, பெண்ணியம், ஆளுமைப் பயிற்சி என எந்தத் துறையில் இயங்கினாலும்,
தனக்கென தனி முத்திரையைப் பதித்து வந்தார்.