சூர்யகாந்தன்

சூர்யகாந்தன்

Profession எழுத்தாளர்

Biography

கோவை பேரூர் ராமசெட்டிபாளையம் கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: மாரப்ப கவுண்டர் – சின்னம்மாள் தம்பதியர். விவசாயக் குடும்பம்.

எம்.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.ஃபில்., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றுள்ள இவர், கோவை அரசு
கலைக் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில் பல்வேறு இலக்கிய இதழ்கள் இவருக்கு அறிமுகமாகி
எழுதத் தொடங்கினார். இவரது ‘உழைக்கும் வர்க்கம் உறங்குமோ’ என்ற முதல் கவிதை ‘மனிதன்’
இதழில் 1973-இல் வெளிவந்தது.

‘தண்டிக்கப்படாத குற்ற வாளிகள்’ எனும் முதல் சிறுகதை ‘தாமரை’ இதழில் 1974-இல்
வெளிவந்தது. தமிழின் பெரும்பாலான இதழ்களில் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன.

கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் தமிழ்த் துறை துணைப் பேராசிரியராக பதினெட்டு ஆண்டு
காலம் பணியாற்றினார். பின்னர், கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைப்
பேராசிரியராக ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது கோவை பூ.சா.கோ. கலை அறிவியல்
கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

‘தாய்’ வார இதழின் ஆசிரியர் குழுவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வரும் சூர்யகாந்தன் இதுவரை 3 கவிதைத் தொகுதிகள், 6
கட்டுரைத் தொகுதிகள், 11 சிறுகதைத் தொகுதிகள், 12 சமூக நாவல்கள் என 32 நூல்களை
தமிழுல குக்குத் தந்திருக்கிறார்.

தொலைக்காட்சியிலும், வானொலியிலும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

இவரது சில கவிதைகள் ஆங்கிலம், மலை யாளம் ஆகிய மொழிகளிலும், சில சிறுகதைகள்
மலையாளம், இந்தி, கன்னடம் ஆகியவற்றிலும், இரு நாவல்கள் ஆங்கிலத்திலும், ஏழு நாவல்கள்
மலையாளத்திலும், ஒரு நாவல் கன்னடத்திலும், ஒரு நாவல் இந்தியிலும் வெளிவந்துள்ளன.

இவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்பத்தைந்து எம்ஃபில் ஆய்வாளர்களும், இருபது பிஎச்.டி
ஆய்வாளர்களும் பட்டம் பெற்றுள்ளனர்.

இவரது படைப்புகள் பாரதியார், பாரதி தாசன், காமராசர், அண்ணாமலை, சென்னை, பெரியார்
ஆகிய பல்கலைக் கழகங்களிலும், கேரள, கர்நாடக பல்கலைக் கழகங்களிலும், பல தன்னாட்சி
கல்லூரிகளிலும் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

அமரர் அகிலன் நினைவு விருது, அழகியநாயகி அம்மாள் நினைவு விருது, இலக்கியச்
சிந்தனை, இலக்கிய வீதி, லில்லி தேவசிகாமணி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
உடுமலை இலக்கியப் பேரவை ஆகிய அமைப்பு களின் விருதுகளையும், பாரதியார் பல்கலைக்கழக
‘தமிழ்ச் சான்றோர்’ விருதையும் பெற்றுள்ளார்.