சுஜாதா

சுஜாதா

Profession எழுத்தாளர்

Biography

திருவல்லிக்கேணியில் சீனிவாசராகவன்- கண்ணம்மாள் தம்பதியருக்கு 03.05.1935-இல் பிறந்தார்.
இயற்பெயர் ரங்கராஜன். இவரைத் தூக்கி வளர்த்தவர் ‘கணிதமேதை’ இராமானுஜம் துணைவியார்.
ஸ்ரீரங்கத்தில், அம்மாவைப் பெற்ற பாட்டியின் வீட்டில் கொஞ்ச காலமும், நிரந்தரமாக அப்பாவைப்
பெற்ற பாட்டியின் வீட்டிலும் வளர்ந்தார்.

திருச்சி புனிதவளனார் கல்லூரியில் இயற்பியலில் ‘இளம் அறிவியல்’ பட்டம் பெற்றார். இவரது
வகுப்புத்தோழர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின்
எம்.ஐ.டி.-யில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கேயும் கல்லூரித் தோழரானார் கலாம்.
சுஜாதா படித்தது ‘மின்னணுவியல்’ (எலெக்ட்ரானிக்ஸ்), கலாம் படித்தது வானூர்தியியல்
(ஏரோநாடிக்ஸ்). இருவரும் அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். முடிவில்லா
கணிதம் பற்றி சுஜாதா எழுத, விமானம் கட்டுவது பற்றி அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்.
பரிசு கலாமுக்கு.

எம்.ஐ.டி.-யில் இன்ஜினியரிங் முடித்ததும் டெல்லி ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் பயிற்சி
ஊழியர் வேலை. பிறகு, சிவில் விமானத் துறையில் வேலை. அங்கு விமானம் ஓட்டக் கற்றுக்
கொண்டார். பிறகு, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு
அதிகாரி. அப்போது ‘ஆல் இந்தியா எஞ்சினியரிங் சர்வீசஸ்’ தேர்வு எழுதி, அகில இந்திய
அளவில் நான்காவது இடத்தில் தேர்ச்சி பெற்றார். டெல்லி, சப்தர்ஜங் விமான நிலையத்தில்
‘டெக்னிகல் ஆபிசர்’ வேலை. 1969 வரை டெல்லியில் வசித்தார். பின்னர், 1969-இல் பெங்களூர்
‘பாரத் எலெக்ட் ரானிக்ஸ்’ (பெல்) நிறுவனத்தில் பணி. 1993-இல் ஓய்வு பெறும் வரை
பெங்களூரிலேயே வசித்தார்.

28.01.1963-இல் திருமணம். மனைவியின் பெயர் சுஜாதா. ‘பெல்’லில் பணியாற்றியபோது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இவர் தலைமையிலான குழுவினர் தான் தயாரித்தனர்.

சுஜாதா 1963- இல் கதைகள் எழுதத் தொடங்கினார். 2008 வரை 104 புதினங்கள், 12 சிறுகதை
நூல்கள், 5 நாடகங்கள், 1 கவிதைத் தொகுதி, 29 கட்டுரை நூல்கள், 6 இலக்கிய ஆய்வு நூல்கள்
ஆகியவற்றை எழுதியுள்ளார்.

தமிழில் முதன் முதலாக அறிவியல் புனைக்கதைகளை அறிமுகம் செய்தவர். கம்ப்யூட்டரில் கதை
எழுதிய முதல் எழுத்தாளர்.

இவரது ‘காயத்ரி’ கதை 1977-இல் திரைப் படமானது. 2010-இல் வெளிவந்த ‘எந்திரன்’ வரை
22 படங்களில் கதை, திரைக்கதை, வசனம் என பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக ‘வாஸ்விக்’ விருதையும்,
ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பிய தற்காக மைய அரசின் விருதையும், தமிழக அரசின்
‘கலைமாமணி’ விருதையும் பெற்றுள் ளார். 27.02.2008 அன்று காலமானார்.