சீனு.இராமச்சந்திரன்

சீனு.இராமச்சந்திரன்

Profession அறிஞர்

Biography

புதுவை, லாசுப்பேட்டையில் சீனுவாசன் – எல்லம்மாள் தம்பதியருக்கு 08.04.1940 அன்று
பிறந்தார்.

1956- இல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்து நான்காண்டுகள்
படித்து, சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார். இதே ஆண்டு மதுரைத்
தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1964-இல் சென்னை சைதை ஆசிரியர் பயிற்சிப்
பள்ளியில் ‘தமிழாசிரியர் பயிற்சி’ பெற்று முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். 1992-இல்
அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி வாயிலாக பி.லிட்., 1993-இல் பி.எட்.,
1995-இல் எம்.ஏ. ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

புதுவை முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீனம்பாக்கம், திருக்கோவிலூர்,
திருச்சிற்றம்பலம், சித்திலம்பட்டு, வழுவாவூர் ஆகிய பள்ளிகளில் 28 ஆண்டுகள் ஆசிரியர்
பணியைச் சிறப்பாக நிறைவேற்றி 1998-இல் பணி நிறைவு பெற்றார். இடையில் ‘புலவர்
குழு’வினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1992-இல் தமிழக அரசு
‘நல்லாசிரியர் விருது’ வழங்கியது.

கி.ஆ.பெ.விசுவநாதம் 1962-இல் 49 புலவர்களைத் தேர்ந்தெடுத்து வாலாசாபாத்தில் நடத்திய
‘தமிழகப் புலவர்க் குழு’ மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.

1957-இல் தான் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் சார்பாக 1959-இல் கண்ணகியின் திருவுருவச்
சிலையை வடித்து வீதிஉலா வரச்செய்து கண்ணகியின் புகழைப் பரப்பினார்.

02.09.1963 இல், வில்லியனூர் மங்கலம் நாராயணக் கவுண்டர் மகள் சரசுவதியைத் திருமணம்
செய்துகொண்டார். இவர்களுக்கு ‘செங்குட் டுவன்’, ‘இளவரசு’ என இரு மகன்கள்; ‘கண்ணகி’,
‘எழிலரசி’ என இரு மகள்கள்.

மயிலம் தமிழ்க் கல்லூரியில் படித்தபோது நாடகத்தின் மீது ஈடுபாடு ஏற்றபட்டது.
இறுதியாண்டு ‘திருநாவுக்கரசர்’ நாடகத்தில் நடித்தார். வீமக்கவுண்டன் பாளையத்தில் தான்
உருவாக்கிய செங்குட்டுவன் நாடக மன்றம் சார்பாக ‘யார் இந்தக் கண்ணகி’ என்ற நாடகம் எழுதி
அதில் கோவலனாக நடித்தார். இந்நாடகம் புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரத் தமிழகப்
பகுதிகளில் சிறப்பாக நடத்தப்பட்டது.

ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ இதழில் எழில் நிலவன் என்ற புனை பெயரிலும், மு.வேலாயு தனார்
நடத்திய ‘தமிழணங்கு’ இதழிலும் கவிதை, கட்டுரைகள் எழுதினார். நாடகம், கவிதை,
திறனாய்வு என 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

1981-இல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை வாசித் தார்.
புதுவை அரசு 1982-இல் ‘பாரதி’ பட்டயம் வழங்கி சிறப்பித்தது. 1996-இல் இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிபதிராஜா இவருக்கு ‘பாவேந்தர் இலக்கியச் செம்மல்
விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.