| Profession | அறிஞர் |
|---|
ஜெர்மனி, சக்சோனியாவில் புல்ஸ்நிட்ஸ்-ல் செல்வந்தர் பர்த்தலோமியா- கேத்தரீனா தம்பதியருக்கு
24.06.1683-இல் பிறந்தார்.
சீகன் பால்குவின் 10-வது வயதில் தாயார், 11-வது வயதில் தந்தை, 19-வது வயதில் மூத்த
சகோதரி அன்னாள், 22-வது வயதில் அடுத்த சகோதரி ரெஜினா என அடுத்தடுத்து இறந்ததால்
பாதிக்கப்பட்டார். இறையியலில் நாட்டம் கொண்டார்.
ஹெர்மன் பராங்கே என்பவரின் உதவியினால் இறையியல் கல்வியை ஹல்லே பல்கலைக்கழகத்தில்
படித்தார். திருமறை கருத்துகளை தெளிவுறக் கற்றார். ஆன்மிகத்தில் ஆர்வத்தை வளர்த்துக்
கொண்டார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
சீகன் பால்கு, புளுச்சௌ இருவரும் சமயப்பணி செய்வதற்காக நான்காம் பிரடெரிக் கினால்
இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ‘சோபியா ஹெட்விக்’ என்ற கப்பலில் நான்கு மாதங்கள்
பயணித்து 09.07.1706 அன்று தரங்கம்பாடியை வந்தடைந்தனர். இக்கப்பல் பயண அனுபவத்தை
‘உண்மையான ஞானத்தின் பொதுமையான பள்ளிக்கூடம்’ எனும் நூலாக எழுதினார். (அந்நூல்
1710-இல் பேப்சிக் நகரில் வெளியானது).
சமயப் பணிக்காக, போர்த்துக்கீசிய மொழி தெரிந்த தமிழ் இளைஞரான ‘முதலியப்பன்’ மூலம் தமிழ்
கற்றனர். கடுமையான முயற்சியினால் எட்டு மாதங்களில், புதிதாகக் கட்டப்பெற்ற எருசேலம்
ஆலயத்தின் திருநிலைப்படுத்தும் விழாவில் 14.08.1707-இல் அருளுரையை தமிழில்
வழங்கினார். பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்றார்.
தமிழர் பண்பாட்டையும், கலைத்திறனையும் கடிதங்கள் வாயிலாக ஜெர்மனிக்கு எழுதி
அனுப்பினார். நீதிவெண்பா, உலகநீதி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களை ஜெர்மன் மொழியில்
மொழிபெயர்த்து 1708-இல் அரசரின் குடும்பத்துக்கு காணிக்கையாக்கினார்.
சீகன்பால்கு ஓர் ஏழை விதவைத்தாயின் வழக்கை சரியான முறையில் விசாரிக்க தரங்கம்பாடி
அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். அக்கடித்தைக் கண்ட ஆளுநர், சீகன்பால்குவைக் கைது செய்ய
உத்தரவிட்டார். அதனால் சீசன் பால்கு 19.11.1708 முதல் 26.03.1709 வரை 128 நாட்கள்
சிறையில் அடைக்கப்பட்டார். சிறையி லிருந்து வெளிவந்த சீகன்பால்கு கிறித்தவர்களுக்கு
தேவதூதன் போலானார்.
புளுச்சௌ உடல்நிலை பாதிப்பினால் 1711-இல் தாய்நாடான ஐரோப்பாவிற்குத் திரும்பினார்.
சீகன்பால்கு தரங்கம்பாடியில் ஆலயம், பள்ளிக் கூடங்கள், விடுதிகள் கட்டினார். விவிலியத்தை
தமிழாக்கம் செய்தார். இறையியல் கல்லூரி ஒன்று உருவாக்கப்பட்டது.
1715-இல் தம்முடைய முன்னாள் மாணவி மரியா டோரதி சால்ஸ்மன் என்பவரைத் திருமணம்
செய்துகொண்டார். இவர்களுக்கு கெட் லிட் எர்னஸ்ட், யோனா கிறிஸ்டியன் லிபர்கட், பர்த்தோ
லோமியாஸ் லிபாகர் என மூன்று மகன்கள் பிறந்தனர்.
புதிய ஏற்பாட்டை அச்சடிக்க அச்சு எந்திரம் 30.06.1712-இல் சென்னை வந்து,
16.09.1712-இல் தரங்கம்பாடியை வந்தடைந்தது. பொறையாறில் காகித ஆலை நிறுவப்பட்டு,
தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் 12.06.1718-இல் வெளிவந்தது. உடல்நலக் குறைவால்
24.02.1719 அன்று சீசன் பால்கு மறைந்தார். அவரது உடல் புதிய எருசலேம் ஆலய பலிபீடம்
முன் அடக்கம் செய்யப்பட்டது.