சி.ஆர்.ரவீந்திரன்

சி.ஆர்.ரவீந்திரன்

Profession எழுத்தளர்

Biography

கோவை அவினாசி ஆட்டையாம்பாளையம் சிற்றூரில், ரங்கசாமி – லட்சுமியம்மாள் தம்பதியருக்கு
20.11.1945 அன்று பிறந்தார். வறுமையான விவசாயக் குடும்பச் சூழல்.

கோவை பூ.சா.கோ கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, கோவை
அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ‘டியூட்டர்’ஆகப் பணியாற்றினார்.

செட்டிபாளையம் ரங்கசாமி ரவீந்திரன் என்பதன் சுருக்கமே சி.ஆர்.ரவீந்திரன். இவரின் முதல்
சிறுகதை ‘இரவின் பூக்கள்’ இலங்கையிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’யிலும், முதல் கவிதை
‘காலச்சுவடு’ சென்னையிலிருந்து வெளிவந்த ‘கண்ணதாசன்’ இதழிலும் அடுத்தடுத்து
வெளியாகின.

தாமரை, செம்மலர், தீபம், கணையாழி, கசடதபற, பிரக்ஞை, உதயம், விழிப்பு போன்ற இதழ்களில்
சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ‘வானம்பாடி’
இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

கோவை அரசு கல்லூரி இலக்கிய விழாவில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பின்ளையை
நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு மலையாள இலக்கியப் படைப்புகளோடும், படைப்பாளி
களோடும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். விவசாயத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு அச்சகத்தில்
பணியாற்றினார். பின்னர், கோவையில் இருந்து வெளிவந்த ‘மேம்பாலம்’, கவிஞர் புவியரசு
நடத்திய ‘காற்று’, மற்றும் ‘விழிப்பு’ போன்ற சிற்றிதழ்களில் பணியாற் றினார். ‘ஆல்’
என்றொரு சிற்றிதழை சொந்தமாக நடத்தினார். ஆறு இதழ்களுக்கு மேல் நடத்த முடியவில்லை.

இதுவரை 14 புதினங்கள், 8 சிறுகதைத் தொகு திகள், 2 நவீன நாடகங்கள், 2 விமர்சன நூல்கள்
வெளிவந்துள்ளன. உலகப் புகழ் பெற்ற தன்னம் பிக்கை நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து
தமிழாக்கம் செய்துள்ளார்.

‘பழைய வானத்தின் கீழே’ இவரது முதல் நாவல் கலைஞன் பதிப்பக வெளியீடாக வந்தது.
‘அங்குத்தாய்’ என்ற இரண்டாவது நாவலை பாரதியார் பல்கலைக் கழகம் இளங்கலை மாணவர்களுக்கு
பாடநூலாக வைத்துள்ளது.

இவரது முதல் சிறுகதைத்தொகுதி ‘ரிவோல்ட்’ கேரளா பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இடம்
பெற்றுள்ளது. ‘ஈரம் கசிந்த நிலம்’ எனும் மூன்றா வது நாவலுக்கு கல்கத்தா ‘பாரதிய பாஷா
பரிஷத்’ விருதையும், கோவை கல்லூரியின் சீனிவாசன் ஸ்ரீரங்கம்மாள்அறக்கட்டளை சிறந்த
நாவலுக்கான பரிசையும் பெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக இளநிலை பட்ட வகுப்பு
மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டது.

வாழ்வியல் உண்மைகளை எவ்விதக் கலப்புமின்றி அலங்காரச் சொற்கள் போடாது, உண்மை உருவத்தை,
உணர்வுகளை உள்ளது உள்ளவாறு எவ்விதப் பூச்சும் பூசாமல் எதார்த்தப்மாக தம்முடைய
படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.